ரோம்: சிரியா, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் அகதிகளை ஏற்றிக் கொண்டு லிபியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் தெற்கு இத்தாலி கடற்பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 60 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஐநா குழந்தைகள் அமைப்பான யுனிசெப் மற்றும் ஐநா அகதிகள் முகமை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பலில் மாயமானவர்களில் 25க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
லம்பேதுசா பகுதியில் சென்ற போது கப்பல் விபத்திக்குள்ளானதாகவும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இத்தாலி கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் இந்த விபத்தில் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அகதிகளாக தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் இது போன்ற பல்வேறு இன்னல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக ஐநா தெரிவித்துள்ளது. அதேநேரம் தெற்கு இத்தாலியின் கலபிரியா கடற்பகுதியில் இருந்து 125 மைல் தொலைவில் மற்றொரு படகும் விபத்துக்குள்ளானதாக இத்தாலி கடலோர காவல் படை அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.
அந்த படகில் பயணித்த 12 பேரின் சடலங்கள் கைப்பற்றுப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக இத்தாலி கடற்படையினர் கூறி உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆபத்தான கடல் வழிப் பயணங்கள் மூலம் 23 ஆயிரத்து 500 பேர் இதுவரை மாயமானதாக ஐநா வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கொலைக்கு முன் பார்ட்டி.. பெங்களூருவை உலுக்கிய ரேணுகா சாமி வழக்கில் சிக்கும் தலைகள்..! - renuka swamy murder case