மல்லபுறம் (கேரளா): மல்லபுறம் மாவட்டத்தில் உள்ள மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் குரங்கம்மை (MPox) அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக, மல்லபுறம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எடவண்ணாவைச் சேர்ந்த 38 வயதான இளைஞர் சமீபத்தில் துபாயிலிருந்து திரும்பிய நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் குரங்கம்மை போன்ற தோல் வெடிப்புகள் இருந்துள்ளது. இதன் எதிரொலியாக அவர் மாஞ்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இளைஞர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதி செய்வதற்காக அவரது சளி மாதிரியானது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் குரங்கம்மை வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, கேரளாவில் Mpox அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் குரங்கம்மை: இதுவரை 116 நாடுகளில் குரங்கம்மை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும், ஆப்பிரிக்காவில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நிலையில் 524 இறப்புகள் பதிவாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்