ஹைதராபாத்: சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்காதவர்கள் உண்டா? மாயுஸ்ட்ரைசர், சன் ஸ்கீரின், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் பேக் என மெனக்கெட்டு பல முயற்சிகளை செய்து முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள பாடுபடுகிறோம்.
ஆனால், முகத்தில் அதிகமாக சேரக்கூடிய எண்ணெய் பசையாலும், ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் வந்து அழகை கெடுத்து விடுகிறது. இந்த பிரச்சனையை, நம் வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் அகற்றலாம் என்றால் நம்பமுடிகிறதா? இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..
நீராவி பிடிக்கலாம்: மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகளால் அவதிப்படுபவர்கள், வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள துளைகள் திறந்து, நச்சுகள் வெளியேறுகின்றன.
பேக்கிங் சோடா: ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது மசாஜ் செய்யவும். 15 நிமிடங்களுக்கு பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி மென்மையான துண்டால் துடைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் கரும்புள்ளிகள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கு இறந்த செல்கள் நீங்குகிறது.
இலவங்கப்பட்டை: தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூளை சம அளவில் எடுத்து பேஸ்டாக தயார் செய்து கொள்ளவும். பின்னர், அதை மூக்கில் மாஸ்காக தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் கரும்புள்ளிகள் மறைவதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவாக எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர், பஞ்சை அதில் நனைத்து மூக்கின் மீது மசாஜ் செய்யவும். இது கரும்புள்ளி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு: இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையில், ஒரு முழு எலுமிச்சை பழச்சாற்றை கலந்து மூக்கில் தடவவும். இப்படி செய்வதால் கரும்புள்ளி பிரச்சனை விரைவில் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
2010 ஆம் ஆண்டு 'ஜர்னல் ஆஃப் காஸ்மெடிக் டெர்மட்டாலஜி'யில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலவை நன்றாக பயன் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- மேலும், கிரீன் டீயில் பஞ்சை நனைத்து மூக்கில் அடிக்கடி தடவி வந்தால் கரும்புள்ளிகளை குறைக்கலாம்.
- மேலும், ஓட்ஸ் மாஸ்க்கை அவ்வப்போது முயற்சிப்பதன் மூலம் சருமம் மென்மையாக மாறும் என்கின்றனர் நிபுணர்கள்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.