வைட்டமின்கள்,கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் என உடலுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்வோம்..
அனிமியாவை குணமாக்கும்: இரத்த சோகைக்கு முக்கிய காரணமாக இருக்கும் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குகிறது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் 0.9 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கின்றது. எனவே, இரத்த சோகை உள்ளவர்கள், இரவில் மூன்று முதல் நான்கு பேரிச்சம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின் மறுநாள் காலை ஊற வைத்த தண்ணீருடன் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை எளிதில் குணமாகும்
இருதய செயழிலப்பை தடுக்கும்: இருதய செயழிலப்புகள் வராமல் தடுக்கும் ஆற்றலை பேரிச்சம்பழம் கொண்டுள்ளது. சாலிசிலேட் (Salicylate) எனும் மூலப்பொருள் பேரீச்சம்பழத்தில் இருப்பதால் இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்த உறைதலை தடுப்பதோடு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
அதுமட்டுமல்லாமல், இதில் இருக்கும் நார்ச்சத்து இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. அரபு நாட்டு மக்கள் அதிக கொழுப்பு நிறைந்த மாமிச உணவுகளை உட்கொண்ட பின் பேரிச்சம்பழத்தை உட்கொள்கின்றனர். இதனால், அரபு நாடுகளில் மாரடைப்பு விகிதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மலச்சிக்கல் நீங்கும்: சாப்பிடும் உணவில் போதிய நார்ச்சத்து இல்லாததாலும், குடல் இயக்கம் சீராக இல்லாத காரணத்தினால் ஏற்படும் மலச்சிக்கலை பேரீச்சம்பழம் போக்குகிறது. 100 கிராம் பழத்தில் 7 கிராம் டயட்டரி ஃபைபர் இருக்கிறது. இதனால், மலத்தை எளிதாக வெளியே தள்ள உதவுகிறது.
எலும்பு வலிமை பெறும்: எலும்புகள் வலிமையாக இருக்க மிகவும் அவசியமான சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியத்தை பேரீச்சம்பழம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், புதிய எலும்பு திசுக்களை உருவாக்கக்கூடிய வைட்டமின் கே சத்துக்களும் பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ளது. இதனால், மூட்டு வலி, முதுகு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் நீங்குகின்றன.
கேன்சர் வராமல் தடுக்கும்: புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் ஃப்ரி ரேடிக்கல்ஸை தடுக்கும் ஆற்றல் பேரீச்சம்பழத்தில் உள்ளது. குறிப்பாக, கோலன் கேன்சர் எனப்படும் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் என பல ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஞாபக மறதி, இரத்த அழுத்த பிரச்சனைகள், நரம்பு மண்டல பிரச்சனை, சரும பிரச்சனைகள் போன்றவற்றை சீர் செய்கிறது.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்