- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: இன்றைய கொண்டாட்ட கலாச்சாரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா ஆகியவை. வாயில் போட்ட உடன் சில் என்ற குளிர்ச்சியும், வாய், மூக்கு வழியாக வெள்ளை புகை வெளிவருவதையும் அனுபவிக்க பொதுமக்கள் மத்தியில் அப்படி ஒரு உற்சாகம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் ஆபத்தை யாரும் பொருட்படுத்துவது இல்லை என்பதே உண்மை.
சமீபத்தில் கூட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்மோக் பிஸ்கடை வாங்கி வாயில் போட்டுள்ளான். அதில் வரும் புகையை வீடியோவாக ஷூட் செய்ய ஃபோனை கையில் வைத்துக்கொண்டு சிறுவனின் தாய் தயாராக இருந்த நிலையில், திடீரென சிறுவன் வலியால் துடித்துள்ளான். அதனை தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இயக்குநர் மோகன் ஜி அதை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா போன்றவைகளை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரை தொடர்ந்து இவற்றை தடை விதிக்கக்கோரியும், இது தொடர்பான வீடியோக்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தும் பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா என்றால் என்ன? இதற்கு பின்னால் இருக்கும் ஆபத்துக் காரணிகள் என்ன? என்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ் சென்னை ரேலா மருத்துவமனையின் மருத்துவத்துறை மருத்துவர் சகாயபிரின்ஸிடம் நேர்காணல் நடத்தியது.
அப்போது பேசிய மருத்துவர் சகாயபிரின்ஸ், ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடாவில் புகை வருவதுதான் அதன் மீதான ஆர்வத்தை மக்கள் மத்தியில் தூண்டியுள்ளது. வாயில் போட்ட உடன், மூக்கு மற்றும் வாய் வழியாக புகை வருவதற்கு அந்த பிஸ்கட் மற்றும் பீடாவில் சேர்க்கப்படுவது பொருட்களை குளிர்விக்க பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜன்தான். இதை நம் வாயில் போடும்போது உடலின் சூடு மற்றும் நைட்ரஜன் வாயுவில் உள்ள குளிர்ச்சி ஆகிய இரண்டும் சேர்ந்து புகையாக வெளியே வரும்.
மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள அந்த திரவ நைட்ரஜன் வாயுவாக வாயில் உள்ளே போனால் எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதால், உணவுப் பாதுகாப்புத்துறை அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், அதே நேரம் அது திரவ நிலையில் வாயில் பட்டு ஒரு சொட்டு உள்ளே போனால் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் எனவும் மருத்துவர் சகாயபிரின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது உடல் உறுப்புக்கள் செயல் இழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, திசுக்கள் சிதைவது உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்த சகாயபிரின்ஸ், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். பொதுவாக இந்த திரவ நைட்ரஜன் உணவை பதப்படுத்தவும், தொழிற்சாலைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். எந்தப் பொருள் மீது இந்த திரவ நைட்ரஜன் பட்டாலும் அதை உடனே உறைய வைக்கும் தன்மை அதற்கு உண்டு.
அதுவே நம் உடலுக்குள் சென்றால் என்ன ஆகும் என சிந்தித்துப் பாருங்கள் எனவும் அவர் கூறினார். இந்த திரவத்தை தான் இந்த ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடாவில் ஊற்றுகின்றனர். அந்த தண்ணீர் ஆவியாக மாறிய பின் வாயில் போட்டால் பிரச்சனை இல்லை. அதே நேரம் திரவத்தின் தன்மை சொட்டு இருந்தால் கூட அதை வாயில் போடக்கூடாது எனவும், குறிப்பாக குழந்தைகளுக்கு இதை கட்டாயம் கொடுக்கக்கூடாது எனவும் மருத்துவர் சகாயபிரின்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இப்படி உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு விபரீதம் உள்ள ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா நமக்கு தேவையா என்பதை சிந்தியுங்கள். குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவின் மீது ஏற்படும் ஆர்வத்தை பெற்றோர் ஊக்கிவிக்க வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: மாம்பழத்தை இப்படி சாப்பிட்டா கேன்சர் அபாயம்! எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி - How To Identify The Good Mango