சென்னை: ஒரு மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்றால், விடியல் எப்படி அமைகிறது என்பதை வைத்து புரிந்து கொள்ள முடியும். உடல் சோர்வு, மன அழுத்தம், மூட் ஸ்விங், மறதி என காலை நேரங்களில் நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டால் அதற்கு தூக்கமின்மை முக்கிய காரணியாக அமைகிறது. இது ஒரு புறம் இருக்க, ஸ்லீப் அப்னியா (sleep apnea) எனப்படும் தூங்கும் போது ஏற்படும் மூச்சுத்திணறல் குறைபாடு இப்போது பலரை பாதிக்க ஆரம்பித்துவிட்டது.
sleep apnea என்றால் என்ன? தூங்கி கொண்டிருக்கும் பொழுது ஏற்படும் மூச்சுத்திணறலை அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா (obstructive sleep apnea) என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு கீழ்கானும் அறிகுறிகள் தென்படும். மிக அதிக இரைச்சலுடன் குறட்டை விடுவது, தூக்கம் தடைபடுவது, காலையில் தலைவலி, பகல் நேரத்தில் சோர்வு, கவனச்சிதறல், ஞாபக மறதி போன்றவைகள் இதற்கான அறிகுறிகளாகும்.
நிம்மிதியான தூக்கம் என்பது, மூளையின் செயல்பாடுகளுக்கு ஓய்வு கொடுப்பது தான். குறட்டை விட்டு தூங்குவதன் மூலம், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. தூக்கத்தில் சுவாசிக்க முடியாமல் தவிப்பதால் தான் குறட்டை ஏற்படுகிறது. இது பின் நாட்களில் உயிருக்கே ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலால் மூளை மற்றும் ரத்தத்திற்கு செல்லும் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபடுகிறது. இது தடை படுவதால் தூக்கம் கலையும் நிலை ஏற்படுகிறது. மேலும், தூக்கத்தில் இருந்து தூக்கி வாரிப்போட்டதை போல விழித்துக் கொள்ளும் நிலைக்கு இதுவே காரணம். தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் பொதுவானது, ஆனால் அதை யாரும் குணப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை என்கிறார் அமெரிக்காவின் பாஸ்டன் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர் டொமினிக் லோ.
ஆராய்ச்சி சொல்வது என்ன? இந்த ஸ்லீப் அஃப்னியாவின் ஆற்றலை கண்கானிப்பதற்காக 4 ஆயிரத்து 257 நபர்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். அதில், ஆயிரத்து 79 பேர் குறட்டை, தூக்கத்தில் இருந்து முழித்து கொள்வது என ஸ்லீப் அப்னியா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எந்த அறிகுறிகளும் இல்லாத 20 சதவீத நபர்களுடன் ஒப்பிடும் போது நினைவாற்றல், மறதி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தீர்வு: இந்த கண்டுபிடிப்புகள் மூலம் ஸ்லீப் அஃப்னியாவின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் இருப்பதாக லோ கூறுகிறார். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார்.
இதையும் படிங்க: திடீர் மாரடைப்புக்கு கரோனா தடுப்பூசி காரணமா? மத்திய சுகாதார அமைச்சர் கூறும் விளக்கம் என்ன?