ஹைதராபாத்: தூக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று. நல்ல தூக்கமே உடலுக்கும், மனதிற்கும் ஓய்வை அளிக்கும். மனிதன் தான் வாழும் ஒவ்வோரு நாளும், மூன்றில் ஒரு பங்கு நிச்சயம் தூக்கத்திற்காகச் செலவிட வேண்டும். ஆனால், இன்றைய இயந்திர வாழ்வில் நாம் தொலைத்த பலவற்றில் தூக்கமும் ஒன்று என்பதே நிதர்சன உண்மை.
தூக்கம் பற்றிய புரிதல் நம்மில் பலருக்கும் இல்லாததே, தூக்கத்தின் அவசியத்தை நாம் அலட்சியம் செய்வதற்கான முக்கிய காரணம். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளில் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அப்போது தான், உடலின் இயக்க நிலையைச் சீராக வைத்திருக்க முடியும். மோசமான தூக்கப் பழக்கம் சிறிது சிறிதாக ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பறித்துவிடும்.
ஆகவே, நல்ல உடல் ஆரோக்கியத்திற்குச் சரியான அளவு தூக்கத்தைக் கடைப்பிடித்தல் என்பது அவசியம். இந்நிலையில், ஒரு சராசரி நபர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது வயதை மட்டுமல்ல, பாலினத்தையும் பொறுத்தது என ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆண்களை விட, பெண்களுக்கே அதிக நேரம் தூக்கம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஏன் பெண்களுக்கு ஆண்களை விட அதிக தூக்கம் தேவை? அதிக தூக்கம் தேவைப்படக் காரணம் என்ன? எவ்வளவு நேரம் தூக்கம் தேவைப்படுகிறது? சரியான தூக்கத்திற்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த 2014ஆம் ஆண்டு "ஸ்லீப் ஜர்னலில்" வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, பெண்களுக்குச் சராசரியாக 7 மணி நேரம் 40 நிமிடம் வரை தூக்கமும், ஆண்களுக்குச் சராசரியாக 7 மணி நேரம் 20 நிமிடம் வரை தூக்கமும் தேவை எனத் தெரியவந்துள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 2 ஆயிரத்து 100 பேரிடம் இந்த ஆய்வானது நடத்தப்பட்டு, அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஏன் பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை?; தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம்: ஆண்களை விடப் பெண்கள், 40 சதவிகிதம் தூக்கமின்மையால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் கவலை மற்றும் மனச்சோர்வினால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இரு மடங்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே, பெண்களின் தூக்கம் பெரிதும் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹார்மோன் மாற்றங்கள்: ஹார்மோன் மாற்றம் என்பது பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்படக்கூடிய ஒன்று. அந்த வகையில், பெண்களின் ஹார்மோன்கள் மாதாந்திர மற்றும் வாழ்நாள் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் காரணமாகத் தூக்கமின்மையால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மாதவிடாய்: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, உடலில் பிடிப்புகள் மற்றும் அசௌகரியம் காரணமாகப் பல பெண்கள் தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். மாதவிடாய் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் புரோஜெஸ்ட்டிரான் (Progesterone) மற்றும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) அளவு மாறுகிறது. இந்த மாற்றங்கள் தூக்கத்தைப் பெருமளவு பாதிக்கும்.
கர்ப்பம்: கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அசௌகரியத்தை உணரும் காரணத்தால், அடிக்கடி மனச்சோர்வு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், வலி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தும் தூக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகும் இந்தப் பிரச்சனைகள் தொடர்வதால், பகலில் தூக்கம் அதிகரித்து, இரவில் தூக்கம் கெடும் சூழல் உருவாகிறது.
மெனோபாஸ் (இறுதி மாதவிடாய்): பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடும் நிலைதான் மெனோபாஸ் எனக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் சுமார் 85 சதவிகித பெண்கள் உடலில் அதிக வெப்பத் தன்மையை உணருகின்றனர். இதன் காரணமாக, உடலில் அதிகளவு வியர்வை வெளியாகி, தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாகத் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மோசமான தூக்கம் மற்றும் பகல் நேரச் சோர்வுக்கு வழிவகுக்கும்.
சரியான தூக்கம் வேண்டுமா?
- தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்,
- தூக்க நேரத்தைச் சரியாக கடைப்பிடித்து, தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்,
- தூங்குவதற்கு முன் கஃபைன் (Caffeine) மற்றும் மதுபானங்களைத் தவிர்க்கவும்,
- மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்,
- படுக்கும் அறையை அமைதியாகவும், இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருங்கள்,
- தூக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் படிங்க: ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகம் - ஏன் தெரியுமா?