ஹைதராபாத்: கார சாரமாக, புளிப்பும் உப்பும் கலந்து நன்றாக ஊறி இருக்கும் ஊறுகாய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? மதியம் சாப்பாட்டிற்கும் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் ஐட்டங்களுக்கும் ஊறுகாயின் காம்பினேஷன் அட்டகாசமாக தான் இருக்கும். ஊறுகாய் மீது உள்ள காதலால், பலரும் அவர்களது வீட்டில் வகைவகையான ஊறுகாய்களை அடுக்கி வைத்திருப்பார்கள்.
பலரும் ஊறுகாய் போடுவதில் ஸ்பெஷலிஸ்டாகவும் இருப்பார்கள். வருடக்கணக்கில் ஊறுகாய்களை சேமித்து வைத்து தினமும் பயன்படுத்துவார்கள். ஆனால், மழைக்காலத்திடம் இருந்து அவற்றை பாதுகாப்பாக வைப்பது மிகப்பெரிய சவால் தான். காரணம், ஈரப்பதம் காரணமாக ஊறுகாய் மீது வெள்ளை நிறத்தில் பூஞ்சை படர்கிறது(Mold in pickles).
இதை தவிர்ப்பது என்பது பெரும் சவால் என்றாலும், சில மாற்றங்களை கொண்டு வருவதால் ஊறுகாயை மழைக்காலத்திலும் பத்திரமாக வைத்திருக்க முடியும். அந்தக் குறிப்புகள் என்ன என்பதை இந்தக் தொகுப்பில் பார்க்கலாம்.
கண்ணாடி ஜாடிகள் தான் பெஸ்ட்: ஊறுகாய் நீண்ட காலத்திற்கு சுவையாகவும் கெடாமலும் இருக்க முதலில் செய்ய வேண்டியது, அவற்றை முறையாக சேமித்து வைப்பது தான். அதற்கு, எப்போதும் காற்று புகாத கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளை பயன்படுத்தவும். முக்கியமாக, பிளாஸ்டிக் டப்பாக்களில் ஊறுகாயை சேமித்து வைக்க கூடாது.
ஜாடிகள் சுத்தமாக இருக்க வேண்டும்: ஊறுகாயை வைப்பதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஜாடியை சுத்தமாக துடைத்திருப்பது மிகவும் அவசியம். ஜாடியை கழுவி ஈரப்பதம் இல்லாத வரை காய வைக்கவும். நன்றாக ஜாடி உலர்ந்த பின்னர், ஊறுகாயை சேமித்து வைக்கலாம்.
பித்தளை,தாமிரம்,இரும்பு போன்ற பாத்திரத்தில் ஊறுகாயை சேமித்து வைப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். காரணம், ஊறுகாயில் உள்ள அமிலம் இந்த உலோகங்களுடன் சேரும் போதும் பல எதிர்வினைகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். இதனால், ஊறுகாயின் நிறம் மற்றும் சுவை இரண்டும் மாற வாய்ப்புகள் உள்ளது.
இந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்: ஊறுகாயில் எண்ணெய் வற்றி உலர்ந்து, வறண்டு போகாமல் இருப்பதற்கு நிழலான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். அதேபோல, ஊறுகாயின் மேற்பகுதி காய்ந்து காணப்பட்டால் எண்ணெய் போதுமானதாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஊறுகாய் தானே கெட்டுப்போகாது என அதிகளவில் செய்து சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு ஊறுகாயை சேமித்து வைப்பதால் நிறமும் சுவையும் மாறுகிறது. எனவே, முடிந்தவரை ப்ரெஷ்ஷாக சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
திறந்து திறந்து மூடாதீர்கள்: ஊறுகாய்களை எடுப்பதற்கு எப்போதும் உலர்ந்த கரண்டிகளை பயன்படுத்துங்கள். மேலும், தினசரி ஊறுகாயை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்றால் பெரிய ஜாடியை திறந்து திறந்து மூடுவதற்கு பதிலாக சிறிய ஜாடியில் தேவையான அளவை மாற்றி வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், பூஞ்சை ஏற்படாமல் பாதுகாக்கலாம். பெரிய ஜாடியை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்