சென்னை: நமது உடலின் செயல்பாட்டில் சுவாச உறுப்பான நுரையீரலுக்கு முக்கிய பங்காற்றுகிறது. தற்போது உலகில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமான பலரும் நுரையீரல் சார்ந்த (அல்லது) சுவாசம் தொடர்பான நோய்களை எதிர்கொள்கின்றனர். இந்த நேரத்தில் நல்ல ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்குச் சுவாச நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது அவசியம்.
நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், மூலிகைகளிலிருந்து சுவாச நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும் என்கிறார் ஜிண்டால் நேச்சரியூர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமை உணவியல் நிபுணர் சுஷ்மா. இயற்கை உணவின் மூலம் எப்படி ஒட்டுமொத்தச் சுவாச ஆரோக்கியத்தையும் எப்படி மேம்படுத்துவது என உணவியல் நிபுணர் சுஷ்மா கூறியதை இத்தொகுப்பில் காணலாம்.
அழற்சி எதிர்ப்பு உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்: அழற்சி எதிர்ப்பு உணவுகளை ஒருவர் தன் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். ஆளி விதைகள் (flax seeds), சுருள்பாசி (spirulina), சியா விதைகள் (chia seeds) ஆகியவற்றில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பிகளாக செயல்படுகின்றன. மேலும், அன்னாசிப் பழத்தில் உள்ள ப்ரோமலைன் என்சைம் நுரையீரலிலிருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. ஆப்பிள், பெர்ரி, ப்ரக்கோலி, க்ரீன் டீ ஆகியவற்றில் உள்ள ஏராளமான குவெர்செடின் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பாஸ்போலிப்பிட்களை எடுத்துக்கொள்ளுங்கள்: கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாஸ்பரஸால் ஆன உணவுப் பொருட்களே பாஸ்போலிப்பிட்கள் எனப்படும். பாஸ்போலிப்பிட்கள் நிறைந்த உணவுகளை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். குறிப்பாகச் சோயா பால், தானியங்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்த Fodmap உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்: Fodmap என்பது ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலியோர்களை குறிக்கிறது. Fodmap ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது செரிமானத்தை எதிர்க்கும் தன்மையுடையது. Fodmap நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் குடல் எரிச்சல், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும். இதன் விளைவாக நுரையீரல் வீக்கம் ஏற்படலாம். கோதுமை, கம்பு, பால் பொருட்கள் போன்றவற்றை உணவுப் பழக்கத்திலிருந்து நீக்குவதன் மூலம் நுரையீரல் வீக்கம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க முடியும்.
குறைந்த ஹிஸ்டமைன் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்: ஹிஸ்டமைன் என்பது உடல் செல்களின் காணப்படும் ஒரு வகையான வேதிப்பொருள். இது தான் தும்மன், மூக்கிலிருந்து நீர் வடிதல், ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலை காய்கறிகள், சிவப்பு வெங்காயம், திராட்சை, ப்ரக்கோலி போன்ற ஹிஸ்டமைனை குறைக்கும் உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்: கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் ஆக்ஸிஜன் பயன்பாட்டை மேம்படுத்தி, சுவாசச் சுமையைத் தணிக்க முடியும்.
ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்: மாதுளை, கொய்யாப்பழம், பூசணி விதைகள், பச்சை இலை காய்கறிகள் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.
போதுமான நீரேற்றத்தைப் பராமரிக்கவும்: போதுமான நீரேற்றம் உகந்த சுவாசச் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானது. போதுமான நீரேற்றம் நுரையீரல் செயல்பாட்டை எளிதாக்குகிறது.
ஒட்டுண்ணி எதிர்ப்பு உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்: நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், சுவாசக் கோளாறுகளைத் தடுப்பதற்கும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. நோனி அல்லது வெண் நுணா சாறு, பூசணி விதைகள், மஞ்சள் மற்றும் வேம்பு உள்ளிட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு உணவுகளை உட்கொள்வது ஒட்டுண்ணிகளுக்கு எதிராக உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மேற்கூறிய உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சுவாச நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்தலாம்.
இதையும் படிங்க: உலக பதின்பருவ மனநல தினம்: பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன?