சென்னை: உணவுப் பழக்க வழக்கம் மற்றும் வாழ்வியல் நடைமுறையில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலருக்குச் சிறுநீரகத்தில் கல் உருவாவது சாதாரணமாகி வருகிறது. இதனால் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
உங்கள் சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதன் அறிகுறி எப்படி இருக்கும்?
- இடுப்பின் பின் பகுதியில் அதீத கடைச்சல் மற்றும் வலி
- சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் பாதையில் கடுகடுப்பு
- சிறுநீர் வெளியேறும்போது இரத்தம் கலந்து வருதல்
- சிலருக்குக் காய்ச்சல் ஏற்படலாம்
சிறுநீரகத்தில் கல் எப்படி? எதனால் உருவாகிறது?: சிறுநீரகத்தில் கல் உருவாக முதல் முக்கியக் காரணம் உணவுப் பழக்கம்தான். நாம் உண்ணும் உணவில் அதீத உப்பு சத்து இருக்கும் பட்சத்தில் கல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. மேலும், போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரகம் மற்றும் அதன் பாதையில் கல் உருவாகிறது. அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் போன்ற தாது உப்புக்களால் உருவாகும் இந்த கல், அதீத வலி தருவது மட்டும் இன்றி, அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்லும் அளவுக்கு அதிதீவிரமானது.
சிறுநீரகத்தில் கல் வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்?: சிறுநீர் கல் உருவாகாமல் இருக்கத் தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுதான் முதல் அறிவுறுத்தல். மேலும், ஒருவர் நாள் ஒன்றுக்குத் தனது ஒட்டு மொத்த உணவில் சுமார் 5 கிராம் வரை மட்டுமே உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உப்பு என்றால் நாம் உணவு சமைக்கும்போது சேர்க்கும் உப்பு மட்டும் அல்ல, நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உப்பு சத்து இருக்கின்றன. உடல் இவைகளையும் உப்பின் தன்மையாகவே ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் இறைச்சியைக் குறைத்துக்கொள்வது நல்லது.
அதில் அதீத புரதச்சத்தும், உப்பின் தன்மையும் உள்ள நிலையில் அதற்கு மாற்றாக பயிறு, பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளை உட்கொண்டால் புரதச்சத்தும் கிடைக்கும் உப்பின் அளவும் கட்டுக்குள் இருக்கும். மேலும், சிறுநீர் கல் அடிக்கடி உருவாகிறது என்ற நிலையில் உள்ளவர்கள், கீரை, சாக்லெட் மற்றும் நட்ஸ் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
சிறுநீரகத்தில் கல் வந்த பிறகு எந்த உணவுகளை உட்கொண்டால் சிறந்தது?: சிறுநீர் மற்றும் சிறுநீர் பாதையில் கல் உருவாகி சிகிச்சை எடுப்பவர்களும், சரி அது வரவே கூடாது என நினைப்பவர்களும் சரி உங்கள் உணவில் வாழை மரத்தின் நலனை நாடுங்கள் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். வாழைத் தண்டு மற்றும் வாழைத் தண்டு தண்ணீர், சிறுநீர்கல் பிரச்சனைக்குச் சிறந்ததது.
வாழை இலை தோசை, வாழைத் தண்டு பொரியல், வாழை பூ பொரியல் மற்றும் வாழையை அடியோடு வெட்டி அதன் நடுப்பகுதியில் ஒரு குழி தோண்டி அதில் இருந்து வரும் தண்ணீரைச் சேகரித்து வெறும் வயிற்றில் குடித்தால் சிறந்த பலன் தரும்.
இதையெல்லாம் கடந்து ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்து ஒன்று இருக்கிறது? : " கல்லுருக்கி செடி" இதன் இலை மற்றும் வேர் இரண்டுமே சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் உள்ள கல்லைக் கரைக்கும் அளவுக்கு மகத்துவம் வாய்ந்தது எனக்கூறப்படுகிறது. இதனால்தான் அதற்கு "கல் உருக்கி செடி" என்ற பெயரும் எழுந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்த செடியை "Scoparia Dulcis, Stone Breaker" என்றெல்லாம் அழைக்கின்றனர். இதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
கல்லுருக்கிச் செடியின் இலையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?: கல்லுருக்கிச் செடியை வேரோடு பறித்து அதில் இருக்கும் இலையை மட்டும் தனியாக ஆய்ந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த இலையை அம்மியில் வைத்தோ அல்லது மிக்சியில் லேசாகத் தண்ணீர் தெளித்தோ அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் இருந்து முழுமையாக இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்து பச்சை பசும் பாலில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அதேபோல அதன் தண்டு மற்றும் வேர் வீணாக்கக்கூடாது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?: வேர் மற்றும் தண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகத் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். அதன் சாறு தண்ணீரில் முழுமையாக இறங்கியப்பிறகு அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் குடிக்க வேண்டும். இதனுடன் நீராகாரம் மிக்க உணவுகளையும் உட்கொண்டுவந்தால், சிறுநீரகம் மற்றும் அதன் பாதையில் இருக்கும் கல் விரைவில் கரைந்து வெளியேறிவிடும்.
இந்த கல்லுருக்கிச் செடி எங்குக் கிடைக்கும்? பொதுவாக இந்த செடி விவசாய நிலங்களை அடுத்த வரப்புகள் மற்றும் வெறுமனே கிடக்கும் நிலங்களில் காணப்படும். நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் இதன் பொடியைக் கேட்டு வாங்கலாம். அது மட்டும் இன்றி அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களிலும் கிடைக்கிறது. நிலத்தில் இருந்து செடியைப் பறித்துப் பயன்படுத்த முயற்சிக்கும்போது, அந்த செடிதானா? என்பதைத் தெரிந்தவர்களிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டு உட்கொள்ள வேண்டும்.
(குறிப்பு: இவை வீட்டு வைத்தியமே.. உங்களுக்குச் சிறுநீரக கல் இருப்பதாகச் சந்தேகம் கொண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.)
இதையும் படிங்க: "பழைய சோறு" இப்படி செய்து சாப்பிடா இரட்டிப்பான பலன் கிடைக்குமா? - How To Make Perfect Fermented Rice