சென்னை: நிபா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது. மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது நிபா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை வெளியிட்டுள்ளது. அதில், “காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை, மனநலப் பிரச்சனை போன்றவை நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாக இருக்கும். எனவே, அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். நோயாளிகளை பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்” உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து சென்னை சிம்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் சுரேந்தரன் கூறியதாவது, “Nipah outbreak என்பது நிபா வைரஸால் ஏற்படக்கூடிய ஒரு தொற்று. நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். நிபா என்பது பழ வெளவால்கள் (fruit bats) என்ற விலங்குகளிடம் இருக்கக்கூடிய வைரஸ்.
பழ வெளவால்கள்: இவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நிலையில், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. வெளவாலின் எச்சம் படும்போது நோய் தொற்று ஏற்படும். மேலும், அவை உண்ட பழங்களை நாம் உண்ணும்போது நோய் தொற்று ஏற்படும். ஒருவருக்கு நோய் தொற்று பரவினால் மற்றவர்களுக்கு எளிதாக பரவும். இந்த நோய் உள்ளவர்களுடன் நெருக்கமாக உள்ள நண்பர்கள், குடும்பத்தினர், மருத்துவர்கள் போன்றவர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது.
நிபா வைரஸ் நோய் அறிகுறிகள்: நிபா வைரஸ் பாதிக்கப்பட்டால் 4 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியும். காய்ச்சல், தாெண்டை எரிச்சல், மூச்சு திணறல், இருமல், மூளையை பாதிக்கும் நோய் என்பதால் குழப்பம் ஏற்படும். மேலும், வலிப்பு, கோமா நிலைக்கும் செல்லலாம். தொற்றுப் பாதித்தால் இறப்பு விகிதம், 45 - 70 வரையில் உலகளவில் உள்ளது. கடந்த ஆண்டு கேராளாவில் ஏற்பட்டதில் இறப்பு விகிதம் 90 சதவிகிதம் வரை உள்ளது.
சிகிச்சை: நிபா வைரஸ்கான சிகிச்சை இதுவரையில் முழுமையாக கண்டறியப்படவில்லை. இந்த நோயால் உறுப்புகள் செயலிழந்தால் அதற்கு தான் சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது வரை சில சிகிச்சை முறைகளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவை தற்போது வரை பழக்கத்திற்கு வரவில்லை.
தடுப்பு நடவடிக்கை: இவை வெளவால்கள் மட்டுமின்றி பன்றிகளாலும் ஏற்படுகிறது. நோய்வாய்பட்ட மிருகங்களை தனிமைப்படுத்த வேண்டும். பழங்களை சாப்பிடும்போது அதில் விலங்குகள் கடித்த தடங்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஒருமுறை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் சுகாதாரமான முறையில் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்” என்று மருத்துவர் சுரேந்தரன் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நிபா வைரஸ் பாதிப்பு; கோவை - கேரள எல்லைப் பகுதியில் சுகாதாரத் துறை அலர்ட்!