சென்னை: அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இல்லாமல் போகும்? நம் கண்கள் ஒருவரை காணும்போது முதலில் பார்பது அவரது முகத்தை தான். அப்படி முதல் இம்ப்ரஸன் கொடுக்கும் முகத்தில் கொழுப்புகள் தங்கி, கூடுதல் கண்ணமாக உருவாகும் இரட்டை கன்னம் ஆங்கிலத்தில் 'டபுள் சின்' (Double Chin) எனப்படுகிறது. டபுள் சின் வருவதால் முகத்தின் வடிவம் மாறுகிறது. இதனால் அழகு குறைபடுவதாக கருதும் பலர், இது குறித்து கவலையடைகின்றனர். இந்நிலையில், சில எளிய பயிற்சிகள் மூலம் டபுள் சின்-க்கு தீர்வு காண முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சூயிங்கம்: தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வாயில் சூயிங்கமை போட்டு மென்று சாப்பிடுவதால் முகத்தாடையில் தேங்கியிருக்கும் கொழுப்பு எளிதில் கரைந்து போகும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், சூயிங்கம் முகத்தசைகளை வலிமையடையச் செய்வதால், அது முகத்திற்கு வடிவம் தருவதாகவும் கூறுகிறார்கள். ஆனால், சூயிங்கம் தேர்ந்தெடுப்பதில் கவனத்துடன் சர்க்கரை இல்லாத சூயிங்கமை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர்.
கன்னம் நீட்டு பயிற்சி: இந்த பயிற்சி செய்வதற்கு முதலில் நின்றபடி தலையை உயர்த்த வேண்டும். பின் நாக்கை வாய்க்குள் இழுத்தபடி, 5 வினாடிகள் தலையை மேலும் கீழும் இறக்கச் செய்வது, கழுத்து தசைக்கு அழுத்தம் தருவதுடன் முகத்தாடையை இறுகச் செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 5 முதல் 6 முறை இப்படி செய்வது முகத்தாடையை இறுகச் செய்வதுடன், கன்னம் மென்மையானதாகவும் மாறிவிடக்கூடும் என்கின்றனர்.
சிம்ஹாசனம்: இது ஒரு ஆசன வடிவிலான பயிற்சி ஆகும். இதற்கு முதலில் முடிந்தவரை நாக்கை வெளியே நீட்டி, பின் நாக்கை முன்னும் பின்னுமாக அசைக்க வேண்டும். 10 வினாடிகள் நிலையில் இருந்தால் கன்னம் குறைவது மட்டுமல்லாமல், தொண்டை தசைகள் வலுவடையும் என்கின்றனர். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்வதால், விரைவில் டபுள் சின் எனப்படும் இரட்டை கன்னம் கரைந்து விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
டென்னிஸ் பந்து பயிற்சி: இந்த பயிற்சிக்கு முதலில் ஒரு டென்னிஸ் பந்தை எடுத்து கன்னத்தின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும். பின் தலையை கீழே குனிந்து, கன்னத்தின் மையத்தில் பந்தை அழுத்தி, ஐந்து விநாடிகள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்தால், கன்னத்தில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கணிசமாக குறைந்து வருவது கண்கூடாகத் தெரியும்.
கழுத்துச் சுற்று பயிற்சி: இந்த பயிற்சியில் முதலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, கன்னத்தை மார்புக்கு கீழே கொண்டு வர வேண்டும். பின் தலையை வலது பக்கம் இருந்து இடது பக்கம் 5 வினாடிகளுக்கு குறையாமல் அசைத்து முடிக்க வேண்டும் இதனால் கழுத்தில் உள்ள கொழுப்பு குறைவதுடன், இரட்டை கன்னமும் குறைகின்றன.
இதையும் படிங்க: குண்டான குழந்தைகளுக்கு 25 வயதிலேயே சுகர் வரும்! எச்சரிக்கும் ஆய்வறிக்கை