சென்னை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் குறைக்க நினைப்பது தொப்பை பகுதியைத்தான். உடலின் புறப்பகுதியில், நம்முடைய கண்ணுக்குத் தெரியும் தொப்பையை மட்டும் கொலஸ்ட்ரால் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளிலும் கொழுப்பு படிந்திருக்கக்கூடும். இது தொப்பை பகுதியைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய கொழுப்பானது இருக்கும் என நினைக்கக்கூடாது. ஒல்லியாக மற்றும் சரியான உடல் அமைப்பைக் கொண்ட மக்களிடமும், இது காணப்படுகிறது. இதனை விசரல் பேட் (Visceral Fat) என ஆரோக்கிய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியர்களை குறிவைக்கும் உடல் பருமன்: ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்கள் இந்த வகையான உடல் பருமன் மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு படிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். அதிலும், குறிப்பாக ஆண்கள் மற்றும் முதியவர்கள் இந்த பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள்.
பெண்களுக்கு தொடை மற்றும் இடுப்பு பகுதிகளிலும், ஆண்களுக்கு வயிற்று பகுதிகளில் கொழுப்பு படிகிறது. ஆண்களின் இடுப்பு சுற்றளவு 100 செ.மீ அல்லது அதற்கு அதிகமாகவோ, பெண்களின் இடுப்பு சுற்றளவு 88 செ.மீ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தால் உள்ளுறுப்பு கொழுப்பு அபாயம் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
எந்த அளவிற்கு ஆபத்து? உடலுறுப்புகளைச் சுற்றி சேரும் கொழுப்பால் உடலில் உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரழிவு நோய், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, கல்லீரல் வீக்கம், அதேபோல் கருத்தரிப்புகளை தடுப்பதற்கான ஹார்மோன் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது என்கிறார், சி கே பிர்லா மருத்தவமனை எடை குறைப்பு அறுவை சிகிச்சை இயக்குனர் மயங்க் மதன்.
என்ன மாற்றம் தேவை? உயிருக்கே ஆபத்தை தரக்கூடிய விசரல் ஃபேட் எனப்படும் கொழுப்பை குறைக்க வேண்டுமென்றால், உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும் என்கின்றனர், ஆரோக்கிய நிபுணர்கள். வெள்ளை சர்க்கரை, டிரான்ஸ் ஃபேட் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது, ஒரு நாளில் 30 முதல் 60 நிமிடம் உடற்பயிற்சி செய்வது, 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், புகைப்பிடித்தல், அதிகப்படியான மது குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் கொழுப்பை குறைக்கலாம் என்கின்றனர்.
இதையும் படிங்க: ஞாபக மறதி, குறட்டையால் அவதிப்படுபவர்களா நீங்கள்? -அப்போ இதை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!