ஹைதராபாத்: தென் இந்திய மக்களின் பிரியமான மற்றும் பிரதான உணவுகளில் ஒன்று தான் இட்லி. வாரம் இறுதியானால் போதும், பெரும்பாலானோர் ஒரு வாரத்திற்கு தேவையான இட்லி மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து விடுவார்கள். அப்புறம் என்ன? காலை, இரவு என தினமும் இட்லி தான். இப்படி தினமும் சாப்பிடும் இட்லியை கொஞ்சம் டிவிஸ்ட் செய்து சாப்பிட்டால்?
நிமிடங்களில் மென்மையாக, சுவையாக, ஆரோக்கியமாக தயார் செய்யக்கூடிய ராகி இட்லியை செய்து பாருங்கள். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு சிறந்த ஆரோக்கிய உணவாகவும் இருக்கிறது. இதை தயார் செய்ய தேவையான பொருட்கள் என்ன? மென்மையாக செய்வது எப்படி? என்பதை இந்தக் கதையில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- ரவை - 1 கப்
- ராகி மாவு - 1 கப்
- எண்ணெய் - அரை தேக்கரண்டி
- கடுகு, சீரகம் - அரை தேக்கரண்டி
- உளுந்து, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- துருவிய கேரட் - கால் கப்
- கொத்தமல்லி - தேவையான அளவு
- தயிர் - 2 கப்
- பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
ராகி இட்லி செய்வது எப்படி?:
- முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
- எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்
- அதன் பிறகு பச்சை மிளகாய் விழுது, கறிவேப்பிலை, துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்
- இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு, ரவையை சேர்த்து சுமார் 10 நிமிடத்திற்கு குறைந்த தீயில் வதக்கவும் (ரவை நன்றாக வதங்கும் போது இட்லியின் சுவை கூடும்)
- பிறகு, ராகி மாவு சேர்த்து சுமார் 5 நிமிடம் சமைக்கவும்
- அதன் பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கவும்
- இப்போது இந்த கலவை ஆறிய பின்னர் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும்( தயிர் புளிப்பாக இருந்தால் இட்லி சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்)
- அதன் பிறகு சிறிது அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்களுக்கு மூடி வைத்து விடவும்
- இப்போது மூடியை நீக்கி அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்
- மறுபுறம், அடுப்பை ஆன் செய்தி இட்லி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும்
- இதற்கிடையில், இட்லி தட்டில் நெய் தடவி, நாம் தயார் செய்து வைத்துள்ள ராகி மாவை ஊற்றவும்
- இறுதியாக, பாத்திரத்தில் இட்லி தட்டை வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான ராகி இட்லி ரெடி..!
இதையும் படிங்க:
- இடுப்பு எலும்பை வலிமையாக்கும் உளுந்து சோறு..மறக்காம செய்து சாப்பிடுங்க!
- How to make a soft Idli : இட்லி-னா மல்லி பூ போல இருக்கனுமா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்