சென்னை: நெடு தூரப்பயணங்கள் தொடங்கி வீட்டின் கழிவறைக்கு செல்லும் நேரங்களில் கூட இயர் பட்ஸ் பயன்பாடு என்பது பலருக்கு முக்கியத்துவம் ஆகிவிட்டது. பாடல் கேட்பது தொடங்கி நீண்ட நேர உரையாடல் உள்ளிட்ட அனைத்திற்கும் இயர் பட்ஸ்.
சாலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்செல்லும்போதும் இயர் பட்ஸ்.. மொபைல் ஃபோன்களை கையில் வைத்துக்கொண்டு இருப்பதுபோலவே சமீப காலமாக பலர் இயர் பட்ஸ்களை கையில் வைத்துக்கோண்டே அலைத்தொடங்கி விட்டார்கள். இந்த இயர் பட்ஸ் பயன்பாட்டால் பலருக்கு கேள்வி திறன் பாதிக்கப்படுவதாகவும், முற்றிலும் அதை தவிர்ப்பது காதுகளின் நலனுக்கு வழிவகை செய்யும் எனவும் ENT மருத்துவர் பிரியா கனகமுத்து அறிவுறுத்தியுள்ளார்.
இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனை: இயர் பட்ஸை பயன்படுத்தும்போது அதன் ஒலியும், அதிர்வும் காதுகளுக்குள் நேரடியாக செல்லும். இதனால் காது மற்றும் மூளைப் பகுதியில் உள்ள நரம்புகள் முற்றிலும், கொஞ்சம் கொஞ்சமாக சேதம் அடைய ஆரம்பிக்கும். இதனால் நாளடைவில் காது கேட்காமல் போக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் பிரியா கனகமுத்து அறிவுறுத்தினார்.
காதில் ஏற்படும் இறைச்சல்: நீங்கள் தொடர்ந்து இயர் பட்ஸை பயன்படுத்தும்போது காதின் மயிர் கால்கள் மற்றும் உட்புற தோல் பகுதி உள்ளிட்டவை பாதிக்கப்படும். இதனால், காதில் ஒருவகையான இறைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். இதற்கு டினைடஸ் எனக்கூறுவார்கள். இப்படி ஏற்படும் பட்சத்தில் இந்த பாதிப்புக்கு ஆளான நபர் உடனடியாக ENT மருத்துவரை அனுகி சிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவர் பிரியா தெரிவித்தார்.
காதிற்குள் ஏற்படும் கட்டிகள்: முன்பு கூறியது போன்ற பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் நாளடைவில் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டும் இன்றி வெஸ்டிபுலர் ஸ்க்வான்னோமா (Vestibular schwannoma), வெஸ்டிபுலர் நியுரோமா (Vestibular neuroma), அக்வாஸ்டிக் நியுரோமா (Acoustic Neuroma) போன்ற கட்டிகள் ஏற்படும். கேன்சர் கட்டிகள் போன்ற இந்த கட்டிகள் காதில் சிறிதாக வளர ஆரம்பித்து நாளடைவில் பெரிதாகிக்கொண்டே போகும். தொடர்ந்து அது உங்கள் மூளையையும் கடுமையாக பாதிக்கும் எனவும் மருத்துவர் கூறினார்.
பாதுகாப்பாக இயர் பட்ஸ் பயன்படுத்துவது எப்படி: முடிந்த வரை இயர் பட்ஸை தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கும் மருத்துவர் பிரியா, பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு அதிக பட்சம் 30 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம் எனவும், அதுவும் அதிக சத்தம் வைக்காமல் அளவான சத்தத்தில் வைத்து உபையோகித்துக் கொள்ளலாம் எனவும் மருத்துவர் பிரியா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் மீண்டு வருவது மிகவும் கடினம்: மருத்துவர் கூறுவது என்ன? - World No Tobacco Day