சென்னை: கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. மேலும், மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “காய்ச்சல் மற்றும் டெங்கு பரவுவதைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளன. எனவே, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகளை தடுக்க காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பருவமழை பெய்து வருவதையும், கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிளினிக்குகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பொது சுகாதாரத்தை உருவாக்கும் வகையில் சிறப்பு தூய்மை முகம் அமைத்து சுத்தம் செய்வதுடன் அது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து காலி இடங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன் கொசு உற்பத்தி ஆகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பூச்சியில் நிபுணர்களுடன் இணைந்து டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பரவுவதற்கு வழிவகுக்கும் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தடுக்க குளோரினேஷனை உறுதிசெய்யவும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வளாகங்கள் ஏடிஸ் கொசு இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் பிரத்யேக காய்ச்சல் வார்டு உருவாக்கப்பட்டு கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
டெங்குவை கண்டுபிடிப்பதற்கான கருவிகள் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்வதுடன் அவசர காலங்களில் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பிளேட்லெட் மாற்றத்திற்கான பிளாஸ்மா பிரிப்பான் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனால் காய்ச்சல், டெங்கு இறப்புகளை தவிர்க்க முடியும். பள்ளி மாணவர்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சுகாதாரக் கல்வி குறித்தும் தங்கள் வீடுகள் மற்றும் வளாகங்களை கொசு உற்பத்தி இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன? எவ்வாறு பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? வடமாநிலங்களில் மீண்டும் தாக்கம்! - GUJARAT CHANDIPURA VIRUS