சென்னை: மார்கெட்டிற்கு செல்லும் போதெல்லாம் பிங்க் நிறத்தில் தனித்துவமான தோற்றத்தில் இருக்கும் பழத்தை நாம் கண்டிப்பாக பார்த்திருப்போம். ஆனால், அதன் நன்மைகளைப் பற்றி நமக்குத் தெரியாததால் அதனை வாங்காமல் கடந்து வந்து விடுகிறோம்.
தோற்றத்தைப் போல அந்த பழத்தின் பேரும் தனித்துவமானது தான். ட்ராகன் பழம் (Dragon Fruit) என அழைக்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டுள்ள இப்பழம் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மார்கெட்டிலும் கணிசமாகக் கிடைக்கிறது.
டிராகன் பழத்தில் இருக்கும் சத்துக்கள்:
- வைட்டமின் சி மற்றும் ஈ
- புரதம்
- நார்ச்சத்து
- இரும்புச்சத்து
- கால்சியம்
- மெக்னீசியம்
இப்பழத்தின் சுவை எப்படி இருக்கும் என்று கேட்டால், கிவி மற்றும் பேரிக்காய் ஆகிய இரு பழங்களின் சுவையைக் கொண்டுள்ளது. டிராகன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை என்னவென்பதைக் பார்க்கலாம்.
உடல் எடையைக் குறைக்கிறது: டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க உகந்த பழமாக உள்ளது. ஒரு பழத்தை முழுமையாகச் சாப்பிடுவதால் பசியைப் போக்கி வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. முக்கியமாக, இடுப்பில் சேரும் கொழுப்பை கரைக்க உதவி செய்கிறது.
சருமம் மற்றும் முடிக்கு நல்லது: பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக உதவுகிறது. தினமும் ஒரு பழம் சாப்பிடுவதால் செயற்கை முடி நிறத்தால் ஏற்படும் முடி சேதத்தை குறைத்து முடியைக் கருப்பாக அடர்த்தியாக வளரச் செய்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாம்: டிராகன் பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் தாய்மார்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை போக்குவதற்கு ஏற்ற பழமாக உள்ளது. மேலும், இதில் உள்ள கால்சியம் கருவில் உள்ள குழந்தையின் எழும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் சிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
வயிற்று ஆரோக்கியம்: நார்ச்சத்து நிறைந்த டிராகன் பழம் செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
இதயத்துக்கு நல்லது: உட்பகுதியில் சிவப்பு நிறம் கொண்ட டிராகன் பழத்தில் கொட்ட கெழுப்பை குறைக்கும் பீட்டாலைன்கள் உள்ளது. பழத்தில் உள்ள கருப்பு விதைகளில் ஒமேகா 3 மற்றும் ஒமோகா 9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இதயத்திற்கு நல்ல தோழனாக இருக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது: டிராகன் பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. காய்ச்சல், சளி ஆகியவற்றை தடுத்து உடலை பாதுகாக்கும் திறனை மேம்படுத்துகிறது. இனி, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த டிராகன் பழத்தை தினமும் உங்கள் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)