சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 115 பேர் உடல் மோசமான நிலையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சாராயம் மற்றும் எரி சாராயம், மெத்தனால் என்பது என்ன? இதனை அருந்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
மெத்தனால் என்பது என்ன?: இது குறித்து விளக்கமளிக்கிறார், ரேலா மருத்துவமனை மூத்த ஆலோசகர் மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 35-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்துள்ள சாராயத்தையே எரிசாராயம் அல்லது விஷ சாராயம் என்று குறிப்பிடுகிறோம். இந்த மெத்தனால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள்களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக குளிர்சாதன பெட்டிகளில் உள்ள உறைவிப்பான் (freezer), கரைப்பான் (solvant) உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது உணவுப்பொருள் அல்ல. இதை எந்த வகையிலும் உணவுப் பொருளாக எடுத்துக்கொள்ள கூடாது. மெத்தனால் கலந்து எரி சாராயமும், சாராயமும் ஒன்று கிடையாது. இதை அறியாத மக்கள், எரி சாயாரயத்தை குடித்து விடுகின்றனர். எரி சாராயத்தை அருந்துவதால், பல்வேறு உடல்நலக்கோளாறுகளும், உயிரிழக்கக்கூடிய அபாயமும் ஏற்படலாம்.
மெத்தனால் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்: மெத்தனாலை அருந்தும் போது, அது குடல், சிறுகுடல் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தம் மூலமாக கல்லீரலில் மெட்டபாலிசமாகி, மெத்தனாலில் உள்ள நச்சுப்பொருட்கள் இரத்தம் மூலம் உடல் முழுவதும் வேகமாக பரவும். மேலும் இந்த நச்சுப்பொருட்கள், உடலில் உள்ள செல்களை தாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தும். இது மட்டுமில்லாமல் மெத்தனால் சிறுகுடல் மற்றும் வயிற்றுக்கு சென்று தாக்கு போது, அல்சர் வரக்கூடும்.
இதன் விளைவாக நெஞ்செரிச்சல், வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும். மேலும் இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலையும், சிறுநீரகங்களை தாக்கும் போது, இரு சிறுநீரகங்களும் முழுவதுமாக செயலிழக்க வாய்ப்புள்ளது. மெத்தனாலில் உள்ள வேதிப்பொருட்கள் கண்களை தாக்கும் போது, பார்வையிழக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது. மெத்தனால் கலந்த எரி சாராயத்தை பருகுவதால் உயிரிழக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே இதை பருகுவது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் இத்தனை பேர் உயிரிழக்க காரணம் என்ன? - மெத்தனால் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து மருத்துவர் விளக்கம்! - ETHANOL VS METHANOL