சென்னை: டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடீஸ்’ வகை கொசுக்கள் மழைக் காலங்கள், குளிர் காலங்களில் இனப்பெருக்கம் அடைகின்றன. இந்த வகை கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறது. மழைக்காலத்தில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகரிக்கிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக கடந்த இரு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது
இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குnaர் செல்வவிநாயகம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு 2024 ஜனவரி முதல் 5 ஆயிரத்து 900 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கிய பின்னர் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். அண்டை மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
உபகரணங்கள் மற்றும் மருந்துகள்: காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவர்கள் சென்று காய்ச்சல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு கொசுவை ஒழிப்பது, புகை தெளிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கூடுதலாக பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
டெங்கு பாதிப்பை கண்டறிவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். மருத்துவமனைகலில் கூடுதலாக படுக்கை தற்பொழுது தேவையில்லை. தேவைக்கேற்ப கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். மருத்துவர்கள் போதுமான அளவில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஏடிஎஸ் கொசு வீட்டைச் சுற்றி உள்ள சுத்தமான நல்ல தண்ணீரில் வாழ்கிறது. இதன் பறக்கும் தூரம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே, வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கியிருந்தால், அதனை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் சுயமாக மருத்துவம் செய்து கொள்ளாமல் அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் உள்ளது. மருந்துகளுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை. ஒவ்வாெரு மாவட்டத்திலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், பூச்சியியல் நிபுணர்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து தேவையான தொழில் நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யும் போது குளோரின் கலந்து அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமாக அனைத்து பிரச்னைகளையும் சரி செய்ய முடியும். பொதுமக்கள் மழைக்காலங்களில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதாார நிலையத்திற்கு சென்று உடனடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பாதிப்புகள்: அடுத்த 3 மாதத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளதால் இது குறித்த அச்சம் தேவையில்லை. டெங்கு வந்தால் சாதாரணமாக காய்ச்சலாக தோன்றும். அடுத்த 3 நாட்களுக்குப் பின்னர் காய்ச்சல் குறையும். காய்ச்சல் குறைவது பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே, தாமாக சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு இந்திய மருத்துவத்துறையின் படி பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவையும், தற்போது தேவையான அளவிற்கு இருப்பில் உள்ளது.
இதையும் படிங்க: மணல் ஈக்கள் பரவும் சண்டிபுரா வைரஸ்.. தொற்றில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி? - prevention of Chandipura Virus