ஹைதராபாத்: முட்டை சாப்பிடுவது என்பது நமக்கு ஒன்றும் புதிது கிடையாது. காலங்காலமாய் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், பெரிய சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது பிரவுன் நிற முட்டைகளை டிரேவில் வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அதனை பார்த்ததும், இது விலை உயர்ந்தது, வெளிநாடுகளில் இருந்து வருகிறது என நமக்கு நாமே பதில் சொல்லிவிட்டு, முட்டையை குறுகுறுவென பார்த்து விட்டு வாங்காமலேயே கடந்து வந்துவிடுவோம். இதற்கு காரணம், வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கடைகளில் பெரும்பாலும் வெள்ளை நிற முட்டைகள் தான் கிடைக்கும். அதை தான் நாம் இத்தனை நாட்களாக வாங்கி சாப்பிடிருப்போம்.
ஆனால், எதற்காக முட்டை பிரவுன் நிறத்தில் இருக்கிறது? உண்மையில் வெள்ளை நிற முட்டையை விட பிரவுன் முட்டையில் சத்துக்கள் அதிகமா? என பல கேள்விகள் நமக்குள் தோன்றும். அதற்கான பதிலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
வெள்ளை முட்டையை விட பிரவுன்/பழுப்பு நிற முட்டையில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல என்கின்றனர் நிபுணர்கள். கோழி முட்டை ஓட்டின் நிறத்தில் உள்ள வித்தியாசத்திற்கு காரணம் கோழி இனங்கள் தான் என்று கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெள்ளை மற்றும் பழுப்பு கோழி முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இரண்டு முட்டைகளிலும் உள்ள சத்துக்கள் ஏறக்குறைய சம அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எல்லாம் கோழிகளை பொருத்தது: Andalusian மற்றும் White Leghorn போன்ற கோழி இனங்கள் அதிக வெள்ளை முட்டைகளை இடுகின்றன. மேலும், Golden Comet, Rhode Island Red, Gold Chicken போன்றவை பழுப்பு நிற ஓடுகள் கொண்ட முட்டைகளை இடுகின்றன. அடர் பழுப்பு நிற முட்டைகளில் புரோட்டோபார்பிரின் (Protoporphyrin) உள்ளது.
இதன் காரணமாக, அவற்றின் ஷெல் சிவப்பு நிறத்தைப் பெறுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சத்துக்கள் மற்றும் சுவை அடிப்படையில் இரண்டுமே ஒன்றுதான் என்கிறார்கள். முட்டை ஓட்டின் நிறம் மாறுவதால் சுவையிலும் தரத்திலும் வித்தியாசம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தான் விலை அதிகம்: சந்தையில் வெள்ளை முட்டையை விட பழுப்பு நிற முட்டை சற்று விலை அதிகம். இதற்குகாரணம், பழுப்பு நிற முட்டையிடும் கோழிகளின் இனங்கள் குறைவு. மேலும், அந்த கோழிகளை வளர்க்க அதிக செலவாகும். இதனால் அந்த முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.