சென்னை: இன்றைய சூழலில் நம்மில் பலர் சமைத்த உணவுகளையும், கடையில் இருந்து வாங்கி மீந்துபோன உணவுகளையும் குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வைத்து உட்கொள்ளும் வழக்கத்தைக் கடைப் பிடித்து வருகிறோம். இதன் பின்னால் இருக்கும் ஆரோக்கியத்திற்கு எதிரான விளைவுகள் குறித்துத் தெரிந்தும் பலர் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதையே செய்து வருகின்றனர்.
குளிர்சாதனப் பெட்டியின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு தான், புற்று நோயின் பாதிப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். உணவே மருந்து என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அவர் அந்தே உணவே இன்று விஷமாக மாறி விட்டது எனவும் வேதனை தெரிவிக்கிறார்.
இது குறித்துப் பேசியுள்ள அவர், நம்மில் பலர் வீட்டில் சமைத்த உணவுகள், கடைகளில் இருந்து வாங்கி மிஞ்சிப்போன உணவுகள், இறைச்சி என அத்தனையும் அந்த குளிர்சாதனப் பெட்டியில் திணித்து வைப்பதைப் பார்க்கிறோம்.
மிஞ்சிப்போன மட்டன் பிரியாணி முதல் வாரக்கணக்கில் சேமித்து வைத்த கறி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள், இட்லி மாவு, பழங்கள், காய்கறிகள், ஜூஸ் வகைகள் என அனைத்தும் குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் இடையே மாறுபட்ட இரசாயன மாற்றம் ஏற்பட்டு, அது உணவின் தன்மையை முழுமையாக இழந்து விஷமாக மாறிவிடும்.
இதை நாம் உட்கொள்ளும்போது என்ன நடக்கும்: குடல் மற்றும் உணவுக்குழாய் உள்ளிட்ட பாகங்களில் புண் ஏற்படுதல், ஹார்மோன் மாற்றம் நிகழுதல், வாயு தொல்லை ஏற்படுதல், பசியின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும்.
காலப்போக்கில் இதன் காரணமாகப் பலருக்குப் புற்றுநோய் ஏற்படவும் அதீத வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அது மட்டும் இன்றி, சமைத்த உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சூடாக்கி உட்கொள்வது உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சரி எந்த பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம், எதை வைக்கக்கூடாது? முதலில், குளிர்சாதனப் பெட்டியில் ஃபிட்ஜ் மற்றும் ஃப்ரீசர் என இரண்டு பாகங்கள் இருப்பதையும், அதை வேறுபடுத்தித் தெரிந்துகொண்டு பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஃபிட்ஜ்-ல் காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்டவை வைக்கலாம்.
அதேபோல் ஃப்ரீசரில் இறைச்சியை வைக்கலாம். அதேபோல, வெங்காயம், கிழங்கு வகை, பூண்டு, பூக்கள், சூடான பொருட்கள், உறுகாய், தேன், பிரெட், கேக் உள்ளிட்ட பொருட்களை ஃபிட்ஜ்-ல் வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இறைச்சியை ஃபிரீசரில் ல் எத்தனை நாள் வைக்கலாம், எப்படி வைக்க வேண்டும்? "முதல் நாள் சமைத்த கறி அமுதெனினும் அறுந்தோம்" எனப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைச்சியை அன்றே வாங்கி, அப்போதே சமைத்து உண்ண வேண்டும், அதை எடுத்து வைத்து அடுத்த நாள் உட்கொள்ளக்கூடாது என்பதே அதன் பொருள்.
வேறு வழியின்றி அன்றாடம் வாங்கி சமைக்க முடியாத நகர்ப்புற மக்கள் வேண்டுமானால் ஒரு நாள் வரை எடுத்து வைத்துச் சமைக்கலாம். அதுவும், இறைச்சி வாங்கி வந்த உடன் அதைச் சுத்தமாகக் கழுவி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து பாத்திரத்தில் அடைத்து வைக்க வேண்டும்.
மீண்டும் அதை வெளியே எடுத்து தண்ணீரில் நன்றாகக் கழுவி, பிறகு சமைக்க வேண்டும். காய்கறி, பழங்கள் மற்றும் இறைச்சிகளை ஒரே இடத்தில் வைக்கக்கூடாது.
இதையும் படிங்க: வெயில் காலத்திலும் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா.? இதை ட்ரை பன்னுங்க.! - Summer Face Care Tips