சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும், அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்கிறோம். ஆனால், அவற்றை பின்பற்றி பயன்பெறுகிறோமா என்பதில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது. ஒரு பெண் தனது வாழ்வில் எடுக்கும் மறுஜென்மம் மகப்பேறு காலம் என்பார்கள்.
இவ்வாறான முக்கிய வாழ்க்கை பகுதி குறித்து நம்மில் பலர் இணையத்தில் தேடி தகவல் அறித்திருப்போம். ஆனால், இந்த தாயின் முக்கிய பொறுப்பான தாய்ப்பால் குறித்தும், அவற்றின் அறிவியல் மற்றும் உளவியல் செயல்பாடுகளை எடுத்துரைப்பதற்கு உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.
தாய்ப்பால் ஒரு வரம்: இந்த 'உலக தாய்ப்பால் வாரமானது’ ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் அனைத்து செவிலியர், மகப்பேறு மருத்துவர், பாலூட்டுதல் ஆலோசகர், குழந்தை நல மருத்துவர், புதிய தாய்மார்களிடம் தாய்ப்பால் கொடுப்பதாலும், அதை குழந்தை குடிப்பதாலும் ஏற்படும் அறிவியல், நன்மை, தீமை குறித்து விழிப்புணர்வு தரும் வாரமாக அமைகிறது. இதுகுறித்து சீதாபதி மருத்துவமனையின் பிரசவ மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர் ரேகா சுதர்ஷன் கூறுவதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் பரிசுதான் தாய்ப்பால்: தாய்ப்பால் ஒரு அறிவியல் சார்ந்த செயல்பாடு எனலாம். ஒரு தாய் தன் குழந்தைக்கு தரக்கூடிய அதிகபட்ச பரிசாக இந்த தாய்ப்பால் இருக்கும். அதன் காரணமாகத்தான் அரசாங்கம், ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடிகள் ஆகியவற்றில் பிறந்த குழந்தைகளுக்கு கண்டிப்பான முறையில் 6 மாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
குழந்தைகளின் பற்களை வரிசைப்படுத்தும் தாய்ப்பால்: இந்த தாய்ப்பாலில் நீண்ட சங்கிலி நிறைவுறா கொழுப்பு அமிலம் (long chain unsaturated fatty acid) இருப்பதால், பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை தெளிவு போன்றவற்றிருக்கு உதவியாக இருக்கிறது. அது மட்டுமின்றி, குழந்தைகள் தங்களின் வாயில் உறிஞ்சி தாய்ப்பாலை எடுத்துக் கொள்வதால் அவர்களது மென்மையான எலும்புகள் வலுப்பெறுகிறது.
இதில் முக்கியமாக, காது பகுதிகளில் ஏற்படும் அடைப்புகளை கலைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் காதுகளில் எந்தவித கோளாறும் ஏற்படாமல் இருக்கும். அதேபோல், இந்த தாய்ப்பாலை குழந்தைகள் நன்கு சுவைத்து குடிப்பதன் விளைவாக, குழந்தையின் பற்கள் சீரான வரிசையில் முளைக்க பெரிதும் உதவுகிறது.
மிக முக்கியமாக, தாய்ப்பால் குடிப்பதன் மூலம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமா, சுவாசக்கோளாறு போன்ற நோய்கள் ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கலாம். மேலும், இந்த தாய்ப்பால் மூலம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் வராமல் ஆரோக்கியமாகவும், எளிய முறையில் உணவளித்து அவற்றை ஜீரணிக்கும் படியும் செய்யலாம்.
தாய்ப்பால் கொடுத்தால் தாய் எடை குறையலாம்: புதிதாக பிரசவித்த தாய்மார்கள் வெண்ணைய், நெய் போன்ற உணவுகள் உண்ணாமல், ஆரோக்கியமாக சாப்பிடுவதுடன் தாய்ப்பால் கொடுத்து வந்தால் எளிதில் உடல் எடை குறையும். தாய் உடம்பில் இருக்கும் கொழுப்புச் சத்துக்களில் இருந்து இந்த பால் சுரப்பதால், கொழுப்புகளை கரைப்பது மூலம் தாயின் உடல் எடையை குறைக்கிறது.
மேலும், கருப்பையைச் சுருக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. இந்த தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் உடலில் இருந்து அதிகப்படியான ஹார்மோன்கள் வெளியேறுவதால், மகப்பேறுக்கு பின் ஏற்படும் (Postpartum Depression) மனச்சோர்வை குறைக்கிறது.
இதேபோல், தாய்ப்பால் கொடுக்கும் போது தாயின் உடலில் கால்சியம் ஆக்ஸிடைஸ் ஆகும் காரணத்தால், கீழ்வாதம் ( osteoarthritis) எனப்படும் எலும்பு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், கணையம் (pancreas) மூலம் சுரக்கப்படும் மெட்டா செல்களால் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதில்லை” என்கிறார் மருத்துவர்.
தாய் மற்றும் சேய் உலகத்தை சமூகம் கெடுக்கக்கூடாது: மேலும் இதுகுறித்து பேசிய மருத்துவர், மகப்பேறு காலத்தில் ஏற்படும் இந்த இயற்கை சங்கிலியில் தாய் மற்றும் சேய் தனி ஒரு உலமாக செயல்படுகிறார்கள். இதில் குழந்தையை தாய் பேணிக் காத்தாலும், பிரசவித்த தாயை கவனமாக ஊக்குவித்து பார்த்துக் கொள்வது தாயைச் சுற்றியுள்ள உறவினர்களாகிய சமூகத்தின் கடமையாகும்.
ஆகையால், புதிதாக தாய்பால் கொடுக்கும் தாயிடம் அரவணைப்புடன் அறிவுரைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். குழந்தை அழுவதை மட்டும் காரணம் காட்டி தாய் சரியாக தாய்ப்பால் கொடுக்கவில்லை என தாயிடம் பழியை தூக்கிப்போட்டு தாயை பதற்றமடையச் செய்யக்கூடாது. ஏனென்றால், தாய்ப்பால் கொடுப்பதும், குழந்தை அதை குடிப்பதும் மிகப்பெரிய அறிவியல் செயல்பாடாகும். அது அவர்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட உலகம் என்பதையும் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் மருத்துவர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தாவரங்களில் இருந்து தாய்ப்பாலா? - கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!