ஹைதராபாத்: வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய வெந்தயத்தில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் பி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. வெந்தயத்தை தினமும் நாம் எடுத்துக்கொள்வதால் பல வகைகளில் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தய தண்ணீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
எடை குறைப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை அருந்தலாம். வெந்தய நீரில் உள்ள அதிக நார்ச்சத்து இயற்கையாகவே பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உடல் வெப்பத்தை தணிக்கிறது: வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது.
சருமப் பொலிவு மற்றும் முடி வளர்ச்சி: வெந்தயத்தில் உள்ள எண்ணெய்கள் சருமத்தை மென்மையாக்கவும் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் நீங்கள் அவதிப்பட்டால் வெந்தயம் தண்ணீர் நல்ல தீர்வாக இருக்கிறது. மேலும், வெந்தயத்தில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டும் பிரச்சினையை சரி செய்து முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
செரிமானம் மற்றும் நெஞ்செரிச்சல்: தினமும் காலை வெந்தய தண்ணீரை குடிப்பதன் மூலம் செரிமான நன்றாக நடந்து மலச்சிக்கல் போன்ற உபாதைகளை தடுக்கிறது. வெந்தய விதைகள் குடல் உட்பகுதியில் பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதால் நெஞ்செரிச்சலின் தீவிரம் குறைகிறது. மேலும், இது இயற்கையான ஆன்டாக்சிட்டாக செயல்படுகிறது.
கொலஸ்ட்ரால்: வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் கரைகிறது. மேலும், நல்ல கொலஸ்ட்ராலை தக்க வைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: வெந்தயத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சர்க்கரை நோய்: வெந்தய நீரை தினமும் குடிப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுவதாக நேஷனல் லைப்ரரி ஆஃப் காங்கிரஸால் வெளியிடப்பட்ட நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் இதழில் உள்ள ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
இதையும் படிங்க: சியா vs சப்ஜா விதை? உடல் எடையை குறைக்க எது சிறந்தது?