வானிலையில் சிறிது மாற்றம் இருந்தால் போதும், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் என அனைத்தும் அழையா விருந்தாளியாக வந்துவிடும். இதில், சிலருக்கு பருவநிலை மாற்றம் மட்டுமின்றி, குளிர் பாணங்கள் மற்றும் உணவை உண்பதாலும், குளிர்ந்த காற்றில் சுற்றுவதாலும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, அனைவரையும் பாடாய் படுத்தும் வறட்டு இரும்மல் வந்து விட்டால் அவ்வளவு தான். சுடுதண்ணீர், மாத்திரை, டானிக் என எதை எடுத்துக்கொண்டாலும் நிவாரணம் என்பது குறுகிய காலமே. ஆனால், வீட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்தால் இதற்கு முழு நிவாரணம் கிடைக்கும் என்கிறார் பிரபல ஆயுர்வேத நிபுணர் காயத்ரி தேவி. வறட்டு இருமலுக்கான மருந்தை எப்படி செய்வது? என்பதை பார்ப்போம்..
தேவையான பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- எள் - 1 கப்
- பால் - 8 கப்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பால் ஊற்றி சூடாக்கவும்
- பால் கொதித்ததும், அதில் அரிசி மற்றும் எள் சேர்த்து வேக வைக்கவும் (குறைந்த தீயில் சமைக்கும் போது முழு சத்துக்களும் கிடைக்கும்)
- அரிசி நன்றாக வெந்ததும், அதனுடன் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு சமைக்கவும்
- இப்போது அடுப்பை அணைத்து சூடு ஆறியதும் உட்கொள்ளலாம்
இந்த மருந்தை எப்போது எடுக்க வேண்டும்?: வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி மதிய உணவிற்குப் பின்,இதை ஒரு மூலப்பொருளாக எடுத்துக்கொள்ள காயத்ரி தேவி அறிவுறுத்துகிறார். மேலும், காலையிலும் மாலையிலும் ஒரு சிறிய கப் அளவிற்கு இந்த மருந்தை சாப்பிடுவது இருமலுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்கிறார்.
நன்மைகள்:
பால்: வறட்டு இருமல் பிரச்சனைக்கு பால் நல்ல மருந்தாக செயல்படுகிறது என்கிறார் ஆயுர்வேத நிபுணர் காயத்ரி தேவி.
அரிசி: நாம் உணவாக உட்கொள்ளும் அரிசியில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வறட்டு இருமலை உண்டாக்கும் வாத தோஷத்தைக் குறைக்கும் குணம் இதற்கு உண்டு எனவும் தெரியவந்துள்ளது
எள் விதைகள்: எள் விதைகள் வாதத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் மருத்துவர். எள்ளில் உள்ள எண்ணெய்யால் வாத தோஷம் குறைந்து இருமல் பிரச்சனை விரைவில் குறையும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்