சென்னை: பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது வாழ்வில் மிகவும் முக்கியமானதாகும். தற்பொழுது மாறி வரும் வாழ்க்கை முறையாலும், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் சிலர் கர்ப்பம் அடைவதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்காக செயற்கை கருத்தரித்தல் மையங்களை பலர் நாடுகின்றனர்.
தங்களுக்கு வாரிசு வேண்டும் என கவலைப்படுபவர்களின் சுமையைப் போக்கும் வகையில், எழும்பூர் மகளிர் நோய் இயல் நிலையம் மற்றும் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் துவங்கப்பட்டுள்ளது. இம்மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “எழும்பூர் மகளிர் நோய் இயல் நிலையம் மற்றும் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் இதுதான் முதல் முயற்சியாக தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து வரைவழைக்கப்பட்டு, தற்போது அந்த பணிகள் முழுமையுற்று இந்த கருத்தரித்தல் மையம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உடல் பருமனாக இருப்பது, உணவு பழக்க வழக்கங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் போன்றவைகள் தான் கருவுறாமைக்கான காரணங்களாக இருந்து வருகிறது.
அந்த வகையில், உலக சுகாதார மையம் இந்தியாவில் கருத்தரிப்பின்மை பாதிப்பு என்பது 25 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட மகளிருக்கு 3.9 சதவிகிதமாக இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் சண்டிகர், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒரு அரசு மருத்துவமனைகளில் இது போன்ற செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இருந்தாலும், அங்கே ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவழிக்கப்படுகிறது.
ஒரு குழந்தை பிறப்பதற்கு ஏறத்தாழ ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகிற சூழல் இருந்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இலவசமாக ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
பின்னர் மருத்துவமனை இயக்குனர் கலைவாணி கூறும்போது, "பெண்களிடம் மகப்பேறு இன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், பெண்கள் காலம் கடந்து 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்வது, மன அழுத்தத்தின் காரணமாக ஹார்மோன் மாற்றம், உடல்பருமன் போன்றவற்றின் காரணமாக மகப்பேறு இல்லாமை அதிகரித்து வருகிறது.
மகப்பேறுக்காக வரும் பெண்களின் எண்ணிக்கை 3 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. மகப்பேறுக்கு வரும் பெண்களுக்கு லெவல் 1 சிகிச்சை அளித்தோம். முழுவதுமான சிகிச்சை ஐவிஎப் மூலமாகத்தான் அளிக்க முடியும். (அதாவது லெவல் 2). இதனை அறிந்து தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்து, முதலில் 50 பெண்களுக்கு ஐவிஎப் சிகிச்சை செய்யலாம் என்று இம்மையத்தை ஆரம்பித்துள்ளோம்.
ஏஆர்டி சிகிச்சையில் லெவல் 1 சிகிச்சை தான் அளித்துள்ளோம். அதில் கர்ப்பப்பை சுவர், முட்டைப்பை வளராமல் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சையும், லேப்ராஸ்கோபி மூலமாக தடைச் சுவர்களை அகற்றியதால் அந்த பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனர்.
ஐவிஎஃப் சிகிச்சையின் மூலம் ஆணின் விந்தை எடுத்து, பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்தி குழந்தை பெற்றவர்களும் உள்ளனர். கடந்த வருடம் மட்டுமே இந்த சிகிச்சை மூலம் 54 பேர் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றுள்ளனர். இதனை அனைத்து மருத்துவமனையிலும் செய்ய முடியும்.
ஐவிஎஃப் என்பது ஆணின் விந்தையும், பெண்ணின் முட்டையையும் எடுத்து சேர்த்து கருமுட்டையை உருவாக்கி, பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையை உருவாக்கும் முறையாகும். கருமுட்டையை வளர வைத்து குழந்தையை உருவாக்குவதற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு வரும். ஆனால், இந்த சிகிச்சை இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சிகிச்சைக்கு புறநோயாளியாகவே வந்து சிகிச்சையை செய்து கொள்ளலாம். வெளியூரில் இருந்து வருபவர்களுக்காக தனியாக படுக்கை வசதியும் ஏற்படுத்தி உள்ளோம். பெண்கள் வாழ்க்கை முறை மாற்றம், குழந்தைப்பேறு தள்ளிப்போடுவது, உடல் பருமன், மன அழுத்தம் போன்றவை இயற்கையாக குழந்தைப்பேறைத் தடுக்கிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இயர் பட்ஸ் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்:மருத்துவர் கூறுவது என்ன? - Dangers Of Using Ear Buds