ஹைதராபாத்: "தினமும் ஜிம்முக்கு போறேன், கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன், ஆனாலும் வெயிட் மட்டும் குறையல" இந்த ஆதங்கத்துடன் இருக்கும் பலரை அன்றாடம் பார்க்கலாம். இந்த விரக்தியால் உடற்பயிற்சியை கைவிடுபவர்களும் இருக்கின்றனர். ஆனால், இத்தகைய மனநிலை தேவையற்றது என்கின்றனர் மருத்துவர்கள்.
டெல்லி அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான சுதிர்குமார் அளித்துள்ள பேட்டியில், இதற்கான காரணங்களை விளக்குகிறார். சர்வதேச பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பத்திரிகை ( International Journal of Environmental Research and Public Health) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதிக எடையுடன் (obese) இருக்கக்கூடிய வயது வந்தோர் (Adults) தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, பல்வேறு நல்ல பலன்களை தரக்கூடியது என கூறுகிறார். எடையைக் குறைப்பது என்பது உடற்பயிற்சிக்கு உத்வேகத்தை தரக்கூடிய ஒன்று என்றாலும், அது மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது என்கிறார்.
இதையும் படிங்க: குழந்தைகளை விளையாட விடுங்க? இல்லனா பிரச்சனை தீவிரமாகும்!
இன்சுலின் சென்சிட்டிவிட்டி, ரத்த அழுத்தம் சீராதல், ரத்த சர்க்கரை அளவு சீரடைதல், நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பது, நல்ல தூக்கம், நீரிழிவு நோய்க்கான அபாயத்தைக் குறைப்பது என நல்ல பலன்களை அடுக்குகிறார் சுதிர்குமார். இது மட்டுமின்றி, ஸ்ட்ரோக் எனப்படும் மூளையில் ரத்த உறைதல் மற்றும் மாரடைப்பையும் தடுப்பதோடு, நல்ல தசை வலிமையையும் உடற்பயிற்சி தரவல்லது என கூறுகிறார்.
இளவயது மரணத்தை தவிர்த்தல், மருத்துவச் செலவு குறைதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவையும் உடற்பயிற்சி நமக்கு அள்ளித்தரும் பலன்களாகும். எடை குறையவில்லை என்றால் நிறுத்த வேண்டியது உடற்பயிற்சியை அல்ல என கூறும் சுதிர், நல்ல உணவுக்கட்டுப்பாடே (Diet) எடைக் குறைப்பிற்கு உதவும் என கூறுகிறார். கார்போஹைட்ரேட் குறைந்த, புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதையும் படிங்க: புற்று நோய் வந்தால் ஆண்குறியை வெட்டி அகற்ற வேண்டுமா?