சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்ற 96வது அகாடமி விருது விழாவில், சிறந்த இயக்குநர், படம், நடிகர்கள், இசையமைப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அகாடமி விருதுகள் அதன் 'இன் மெமோரியம்' மாண்டேஜ் ('In Memoriam' montage) என்ற பிரிவில், கடந்த ஒரு வருடத்தில் மறைந்த திரைத்துறை பிரபலங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அப்படி, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லகான்" மற்றும்' 'ஹம் தில் தே சுகே சனம்' போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கான செட்களை உருவாக்கிய புகழ்பெற்ற கலை இயக்குநர் நிதின் தேசாயை, ஆஸ்கர் விழாவில் பிரபலங்கள் நினைவுகூர்ந்து உள்ளனர்.
யார் இந்த நிதின் தேசாய்? இந்தியில் வெளியான முக்கியமான படங்களிலும், பிரபல இயக்குநர்களுடனும் கலை இயக்குநராக பணியாற்றியவர் நிதின் சந்திரகாந்த் தேசாய். 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றிய இவர், அசுதோஷ் கோவாரிகர், விது வினோத், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார்.
கலை இயக்குநராக சிறந்த பங்களிப்பு அளித்த தேசாய், நான்கு முறை சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த கலை இயக்குநருக்கான பிலிம்பேர் விருதை மூன்று முறையும் பெற்றுள்ளார். முக்கியமாக ஜோதா அக்பர், பிரேம் ரத்தன் தன் பாயோ போன்ற படங்களிலும், பிரபல டிவி குயிஸ் நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், இவர் ஆற்றிய கலைப் பணிக்காக அறியப்படுகிறார்.
கடந்த 2005ஆம் ஆண்டு, மும்பையின் கஜ்ரட் பகுதியில் 52 ஏக்கர் பரப்பளவில் ND ஸ்டுடியோ ஒன்றை நிதின் தேசாய் நிறுவினார். அதில், ஜோதா அக்பர், ட்ராஃபிக் சிக்னல் உள்ளிட்ட படங்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியும் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதின், தனது சொந்த ஸ்டுடியோவில் தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டின் பிரபல கலை இயக்குநராக வலம் வந்த நிதின் தேசாய் உயிரிழந்தது சினிமாத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது அவர் ஆற்றிய சிறந்த பணிக்காக ஆஸ்கர் நிகழ்ச்சியில் பிரபலங்களால் நினைவு கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Tenet-க்கு கிடைக்காத ஆஸ்கர் Oppenheimer-க்கு கிடைத்தது எப்படி? 3 முறை நோலனை புறந்தள்ளிய ஆஸ்கர்!