சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை நாயகன் என அழைக்கப்பட்டார். அவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும். சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும், அந்தப் படங்கள் போதுமான வசூலை பெற்றுக் கொடுத்தது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என கோலோச்சிய அந்த காலகட்டத்தில், ஜெய்சங்கர் படங்கள் தனியாக ஆதிக்கம் செலுத்தி வந்தன.
அதனைத் தொடர்ந்து, அந்த பெயர் நடிகர் விமலுக்கு கிடைத்தது. ஒரு காலத்தில் விமல் நடித்த படங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகின. ஆனால், அவை ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. நடிகர் விமலின் படங்கள் எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தன.
விமலைத் தொடர்ந்து அந்த பெயர் விஜய் சேதுபதிக்கு மாறியது. தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த படங்கள் வாரந்தோறும் வெளியாகின. அப்போது விஜய் சேதுபதியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். விஜய் சேதுபதி நட்புக்காக நடித்துக் கொண்டு இருந்த காலகட்டத்தில், வாரந்தோறும் அவர் நடித்து வெளியான படங்கள், ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்த நிலையில், தற்போது அந்த வெள்ளிக்கிழமை நாயகன் பட்டம் ஜி.வி.பிரகாஷ் வசம் வந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அவரது நடிப்பில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், பெரும்பாலான படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும், தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடந்த வாரம் ரெபல் திரைப்படம் வெளியானது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி கள்வன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து, அதே ஏப்ரல் மாதத்தில் டியர் திரைப்படம், அதற்கடுத்து கிங்ஸ்டன் எனத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ஜி.வி.பிரகாஷ் குமாரை இன்றைய வெள்ளிக்கிழமை நாயகன் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்! - Lollu Sabha Seshu