சென்னை: தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர், நடிகர் விஜய். ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) படத்தில் நடித்து வருகிறார்.
இந்திரைப்படம் அவரின் 68வது படமாகும். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், யோகி பாபு, சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும், நடிகை த்ரிஷா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதனைப் படக்குழு வெளியிட்ட போஸ்டரும் உறுதி செய்தது.
மேலும், அதிக விஎஃப்எஸ் (VFX) காட்சிகளைக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கி, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. சென்னை, புதுச்சேரியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தளத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி விஜய்யைப் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக, கோட் படக்குழுவினர் அடுத்த வாரம் கேரளா செல்ல உள்ளனர். பின்னர் திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டைப் போலவே கேரளாவில் அதிக ரசிகர்களை விஜய்க்கு உண்டு.
இந்த நிலையில், பல நாள் கழித்து படப்பிடிப்பிற்காக விஜய் கேரளா செல்ல உள்ளதால், அங்குள்ள அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் 51வது திரைப்படமான காவலன் திரைப்படத்தின் படப்படிப்பின் போதும், துப்பாக்கி பட நேரத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்கும் விஜய் கேரளா சென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து தற்போது கேரளா செல்லவிருக்கிறார்.
இதையும் படிங்க: முதல்முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அனுஷ்கா!