சென்னை: தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களின் படங்களில், அவர்களது சிறு வயது தோற்றத்தில் நடித்து புகழ் பெற்றவர் சுரேஷ் என்கிற சூர்ய கிரண். தமிழில் மௌன கீதங்கள், படிக்காதவன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய மாஸ்டர் சுரேஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 200 படங்களில் நடித்திருக்கிறார்.
பிறகு சூர்ய கிரண் என்ற பெயரில் தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம்,ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குநராக இரண்டு மாநில விருதும் (நந்தி விருது) பெற்றவர்.
கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக அவதிப்பட்டு வந்த சூர்ய கிரண், இன்று காலை 11 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 48. இவரது முன்னாள் மனைவி சரத்குமார் நடித்த சமுத்திரம் படத்தில் தங்கையாக நடித்த கல்யாணி ஆவார். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
சூர்ய கிரண் திரைப்பயணம்: 1980-85 காலகட்டங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்தார். சென்னை புரசைவாக்கத்தில் இவரது வீடு இருந்த நிலையில், நாடகத்தில் முருகன் வேடம் ஏற்று நடித்திருந்தார். அதனைப் பார்த்த ஒருவர், இவரை மலையாள படத்தில் நடிக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து, சூர்ய கிரண் பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
பின்னர், பாக்யராஜ் இயக்கிய மௌன கீதங்கள் படத்தில், அவரது மகனாக நடித்து பிரபலமானார். அப்படத்தில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற டாடி டாடி ஓ மை டாடி என்ற பாடலில் இவரது நடிப்பு மிகவும் பிரபலமானது.
ரஜினியின் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் சூர்ய கிரண் சிறுவயது ரஜினிகாந்த் கதாபாத்திரமாக நடித்திருந்தார். படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால், பள்ளிக்குச் செல்லவில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக திரைப்பட இயக்குநரானார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் தனம் கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா, இவரது சகோதரி ஆவார். இவரும் சிறு வயதிலிருந்தே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குறிப்பாக, சத்யராஜ் நடித்த பூவிழி வாசலிலே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் சுஜிதா.
சூர்ய கிரணுக்கு இயக்குநர் ஆன பிறகும் மாஸ்டர் என்ற அடையாளம் மாறாமல் இருந்தது எனவும், அதுவே எனக்கு மிகப்பெரிய மைனஸாக மாறியதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் மாஸ்டர் சுரேஷ் பாடல் இருந்தால் அப்படம் வெற்றி என்ற நிலை இருந்தது.
மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், படிக்காதவன், ரங்கா, கடல் மீன்கள் என இவரது படங்கள் ஏராளம். சிறு வயதில் மிகப் பெரிய குழந்தை நட்சத்திரமாக விளங்கிய சூர்ய கிரணின் மறைவு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்கரில் நினைவு கூறப்பட்ட இந்திய கலை இயக்குநர்…யார் இந்த நிதின் தேசாய்?