சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள சர்வதேச சினிமா மற்றும் கலை நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் இயக்கும் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், "சினிமாவில் இயக்குநராவது மட்டும் வெற்றியல்ல, கதைகளை உங்கள் படைப்பாற்றலை பல்வேறு பரிணாமத்தில் கொண்டு செல்ல வேண்டும். சினிமா கல்வியை நான் பார்க்கவில்லை, எங்கள் பயணத்தை தொடங்கும் போது ஒரு இடத்தை தேடி போனோம் கடுமையான பயணமாக இருந்தது.
இப்போது உங்களுக்கு தொடக்கம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் வந்த பயணம், சமூக பொருளாதார சூழல் காரணமாக கடுமையான பயணம். அடிப்படை வலிமையாக கலையை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு தொடங்க போகிறீர்கள் என சினிமாவில் ஆரம்ப கால பயணம் குறித்து வெற்றி மாறன் கூறினார்.
இதனைத்தொடர்ந்து வெற்றி துரைசாமி குறித்து பேசுகையில், "வெற்றி துரைசாமி நம்முடன் இல்லை, அவர் நமக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவர் பெயரில் வைல்ட்லைஃப் (wildlife) போட்டோகிராபி போட்டிகள் நடத்தப்பட்டு, அவர் பெயரில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஐஐஎப்சி பயணத்திற்கு தோள் கொடுக்க வந்த விஜய் சேதுபதிக்கு நன்றிகள்" என கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "இதன் பாடத் திட்டத்தை பார்த்தேன், கேட்டேன், வகுப்புகள் பிரமாதமாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் கதைகள் சொல்லப் போகும் நாட்களுக்காக காத்திருக்கிறேன். என் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது பெருமகிழ்ச்சி.
என்னுடைய படங்களை மக்கள் கலாய்த்தும் இருக்கிறார்கள், நன்றாக இருக்கும் படத்தை ரசித்தும் கொண்டாடியும் இருக்கிறார்கள். இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும், கடந்த 14 வருடங்களாக கலாய்ப்பதையும், பாராட்டுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அந்த அனுபவத்தில் சொல்கிறேன், அது இயல்பு தான்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. நன்றி கூறி வீடியோ வெளியிட்ட பாடகி பி.சுசீலா! - P susheela