சென்னை: கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஆனந்தி. முதல் படத்திலேயே நடிப்பால் கவனத்தை பெற்று ரசிகர்களால் கயல் ஆனந்தி என அழைக்கப்படுகிறார். இவர் நடித்த த்ரிஷா இல்லேனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ஆனந்தி, தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்த மாதம் மங்கை என்ற படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’.
இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், அறிமுக நடிகர்கள் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று விஜய்சேதுபதி முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய கயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.
இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகமாகிறார். இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். மேலும் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படம் விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பறக்கும் படையினர் மாணவர்களை அச்சுறுத்தக் கூடாது - தேர்வுத்துறை வலியுறுத்தல்!