சென்னை: விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இயக்குநர் விநாயக் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'ரோமியோ'. இப்படம் இந்தாண்டு ரம்லான் பண்டிகையையொட்டி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், படக்குழு தரப்பில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்கள் விஜய் ஆண்டனி, தலைவாசல் விஜய், நடிகை மிருணாளினி, இயக்குநர் விநாயக், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, விழா மேடையில் நடிகர் விஜய் ஆண்டனி பேசினார்.
அப்போது பேசிய அவர், "ரொம்ப சந்தோஷமாக, பெருமையாக இருக்கிறது. தலைவாசல் விஜய்யின் நடிப்பை என் சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். மிருணாளினி திறமையான பெண். ஷூட்டிங் ஸ்பாட்டில் படத்தைப் பற்றி நிறைய பேசுவோம். முதல் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். லவ் ஸ்டோரி என்றதும் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. யாரெல்லாம் லவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ நீங்கள் இப்படத்தை பார்க்கலாம்" என்று கூறினார்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடுகிறோம். ரொம்ப நாளாக குடி என்பது இருந்து வருகிறது. அந்த காலத்தில் திராட்சை ரசம், ஜீசஸ் கூட குடித்ததாகக் கூறப்படுகிறது. ராஜாக்கள் காலத்தில் சோமபானம் என்று இருந்திருக்கிறது. ஆண்டிற்கு ஒரு படத்திற்காவது இசையமைக்க வேண்டும். இதற்கு பின்னர் நிறைய காதல் படங்கள் வரும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய நடிகை மிருணாளினி, "இந்த படம் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு படம். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். விஜய் ஆண்டனிய்டன் இணைந்து பயணித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என் வாழ்க்கையுடன் தொடர்புடைய காட்சிகள் இப்படத்தில் அமைந்துள்ளன" எனக் கூறினார்.
அதன் பின்னர் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "இந்த மாதிரி விஜய் ஆண்டனியை நான் பார்த்தது இல்லை. எப்போதும் சீரியசாக பார்த்த ஒருவரை ஜாலியாக, காதல் படத்தில் பார்க்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. ரோமியோவாக விஜய் ஆண்டனியை காட்டிய இயக்குநருக்கு நன்றி. இவரை இந்த மாதிரி பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
வாழ்க்கையில் எத்தனை சோதனைகள், இடர்பாடுகள் வந்தாலும் அதை தாண்டி தைரியத்துடன் ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும், அடுத்தடுத்த கட்டத்துக்கு எப்படி முன்னேறி செல்ல வேண்டும் என்பதற்கு சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையில் மிகப்பெரிய உதாரணமாக விஜய் ஆண்டனியை தான் பார்க்கிறேன்.
விஜய் ஆண்டனி தொடர்ந்து தனது படங்கள் மூலம் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அவரை சுற்றி இளைஞர்கள், புதுப்புது இயக்குநர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்த படத்தைப் பற்றி சொல்லும் போது, தனக்கு நம்பிக்கை இருக்கிறது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும் நம்பிக்கையோடு சொன்னார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் எழுத்தில் 'இனிமேல்': நடிகராகிறாரா இயக்குநர் லோகேஷ் கனகராஜ்?