சென்னை: ஆர்.எஸ்.என்ட்டெயின்மென்ட் தயாரித்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் திரைப்படம் விடுதலை 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இதன் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ள காட்சிகளை தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியில் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலை 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து சுமார் 20 துணை நடிகர்கள் ஏஜென்ட் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், படப்பிடிப்பிற்கு முன்னதாக பேசியது போல, துணை நடிகர்களுக்குப் பேசிய ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர், தென்காசி ரயில் நிலையம் முன்பு மிகுந்த சத்தத்துடன் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்காததைக் கண்டித்து பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேசிய அவர்கள், தங்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 500 ரூபாய் பேசப்பட்டதாகவும், ஆனால் ஆடை அணியாதது, முடி திருத்தம் செய்யாதது என ஏனைய காரணங்களைக் காட்டி, தயாரிப்பு நிறுவனத்தில் 350 ரூபாய் தான் கொடுத்தார்கள் என தங்களை அழைத்து வந்த ஏஜெண்ட் காரணம் தெரிவித்து, தென்காசியிலிருந்து மதுரைக்கு தங்களை ரயில் ஏற்றி விட்டதாகவும், குற்றம்சாட்டினர். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியதாவது, தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆட்களுக்கும் ரூ.550 ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டதாகவும், தங்கள் தரப்பில் அதற்கான அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதாகவும், நடிகர்களை அழைத்து வந்த ஏஜென்ட் தரப்பில் தான் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கும் என்றும், அப்படி தவறு நடந்திருந்தால், உடனடியாக அவரை படக்குழுவிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த துணை நடிகர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய முழு சம்பளத்தையும் தாங்களே வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.