சென்னை: ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில், விஷ்ணுபிரியா வேலுச்சாமி தயாரித்து இயக்குநர் காளிமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் வேட்டைக்காரி. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடலாசிரியர் வைரமுத்து, அமைச்சர் பெரிய கருப்பன், இயக்குநர் பேரரசு, பாடகர் அந்தோனிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, "இயக்குநர் என்னை சந்தித்து கதை சொன்னதும் எனக்கு பிடித்திருந்தது. ஒரு படத்தை எப்படி அமல்படுத்துதல், நிறைவேற்றுதல், நெஞ்சில் தைப்பது போல் காட்சி அமைத்தல் தான் சினிமா. தலைப்பு என்பது எங்களுக்கு புதிதல்ல. நான் எழுதிய பாட்டு சில படங்களுக்கு தலைப்பானது.
எத்தனை பேர் என்னை ரகசியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அறிய மாட்டேன். அத்தனை பேரும் வைரமுத்து நமக்கானவர், தமிழ் நம்முடையது, ஏன் கேட்க வேண்டும் என்ற உரிமையில் எடுத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில் ஜெயகாந்தன் பாணியில், ஏன் கேட்க வேண்டும், இல்லாதவர்கள் எடுத்து கொள்கிறார்கள் என்பது. எழுதி தருகிறவர்கள் சரியாக இருந்தால் கடமை சரியாக நடக்கும்.
ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் படம் ஓடும் என்பதற்கு சான்று தந்தால் ஏற்று கொள்கிறேன். தமிழ் ஏன் தமிழறியாத மாநிலத்தில் செல்லுபடியாக கூடாது? என்று கேள்வி எழுப்பினார். மாலை பேசிய பேச்சுக்கு அதிகாலையில் விமர்சனம் வருகிறது. தயவுசெய்து ஊடக ஆற்றலை நன்மைக்கு பயன்படுத்துங்கள். இயற்கை அழுதால் மனிதன் சிரிப்பான். மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.
இப்போது ஏன் நல்ல பாடல்கள் வருவதில்லை. பாடலில் பிறந்து வளர்ந்து பாடலில் முடிந்து போகும் இனம் தமிழினம். நாளுக்கு நாள் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தமிழர்கள் சிதறி கொண்டு வருகிறார்கள். இந்த வெயிலில் திரையரங்குகளில் கூட்டம் வருவதற்கு காரணம், 2 மணி நேரம் ஏ.சி.யில் இருப்பதற்கு.
சினிமா மாற்றம் பெற்று கொண்டு இருக்கிறது என்று சொல்கிறேனே தவிர, மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும். அது தன் வடிவத்தை தான் மாற்றுகிறது. பத்திரிகையாளர்கள் சர்ச்சையை உருவாக்கி விடாதீர்கள். உங்கள் சர்ச்சையை எங்களால் சமாளிக்க முடியவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குனர் பேரரசு, நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்திற்கு தலைப்பு தந்தவரும் வைரமுத்து. அவரது பாடலில் இருந்து இந்த தலைப்பு எடுக்கப்பட்டது. ஒரு பாடல் ஹிட்டாக காரணம் இசை தான். காலத்திற்கும் ரசிகர்கள் மனதில் நிற்க வேண்டும் என்றால் பாடல் வரிகள் மிகவும் முக்கியமானது. திரை இசைக்கு, வைரமுத்து பல்லாங்குழி மாதிரி. வைரமுத்து சென்னைக்கு வந்து 40 வருடம் இருந்தாலும் அவருக்குள் கிராமத்தான் இருக்கிறான்” என்றார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், “வைரமுத்து பிறவி கவிஞராக பிறந்திருக்கிறார் என்றால் மிகையாகாது. 44 ஆண்டு திரை பயணத்தில் வெற்றியோடு பாடல்களை தருவதிலும், திரைப்படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அற்புதமான வார்த்தைகளால் பாடல்களை படைப்பதில் முன்னணியில் இருக்கிறார்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: IMDB TOP 100; ரஜினி, விஜயை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்.. அஜித்குமாருக்கு எந்த இடம்? - IMDB Top 100 Indian Celebrities