சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’ (greatest of all time). இது நடிகர் விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஏற்கனவே கோட் படத்தின் இரண்டு பாடல்கள் 'விசில் போடு', 'சின்ன சின்ன கண்கள்' வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோட் படத்தின் மூன்றாவது பாடல் நாளை(ஆகஸ்ட் 2) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் 'next update #goat3rdsingle' என பதிவிட்டிருந்தார். அதே போல் நேற்று யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஸ்டுடியோவில் வெங்கட் பிரபு தலையில் கையை வைத்து கொண்டு உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, "இவனுங்க தொல்ல தாங்க முடியல" என கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
கோட் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் சிறப்புக் காட்சி ரிலீசுக்கு முன்னதாக இங்கிலாந்தில் திரையிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கோட் படத்தை வெளியிடும் 'ahimsaentertainment' நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அஜித்திற்கு மங்காத்தா, சிம்புவிற்கு மாநாடு ஆகிய மெகா ஹிட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, விஜய்யை அவருக்கே உரித்தான ஸ்டைலில் திரையில் காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் புதிய கீதை படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அக்டோபருக்கு பிறகு படப்பிடிப்பு நிறுத்தமா? நாளை தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர செயற்குழு! - TN Producer Council meeting