சென்னை: இயக்குநர் நேசம் முரளி இயக்கி தயாரித்துள்ள, கற்பு பூமி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று (பிப்.22) வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டியோவில் நடைபெற்றது.
இதில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மற்றும் தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த விசிக தலைவர் திருமாவளவனிடம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு (Central Board of Film Certification) அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளது என்று கூறியுள்ளார். படத்தின் இயக்குநர் நேசம் முரளி, படத்தில் கண்ணகி சிலை உள்ளது என்பதாலும், படத்தின் தலைப்பு கற்பு பூமி என்பதாலும் படத்தின் பாடலை வெளியிட முடியாத நிலை உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கு, விசிக தலைவர் திருமாவளவன், இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளை தான் வெளியிட கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். பின்னர், நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “ இந்தியாவில் தற்பொழுது உள்ள பள்ளிகளில், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்ப சொல்கிறார்கள். இந்த அநீதியை கண்டு கோபம் வருகிறது.
பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் நாம் அனைவராலும் என்ன செய்ய முடிந்தது. கலாச்சாரம் வளர்ந்து வருவது தற்போதைய கால சூழ்நிலையில், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பொள்ளாச்சி என பெயர் சூட்டப்பட்டது.
இது போன்ற படங்கள் விலை போனாலும், போகாவிட்டாலும், கவலை இல்லாமல் கதைக்களத்தை இயக்கநர் இயக்கியுள்ளார். கற்பு பூமி என்ற பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்று தற்பொழுது கூறியுள்ளனர். வெளிப்படையாக சாதி உணர்வை வெளிப்படுத்தும் திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி வழங்குகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு, 150 இடங்களில் படத்தின் காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.
இது இயக்குநர் நேசம் முரளிக்கு நேர்ந்த ஒரு போராட்டம் அல்ல, தனிப்பட்ட முறையில் அவருடைய படைப்புக்கு எதிராக நிகழ்த்தப்படுகிற ஒரு ஒடுக்குமுறை. நாட்டில் நடக்கின்ற அநீதி மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற சூழல் குறித்து படம் பேசக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். இடதுசாரி என்றால் கம்யூனிஸ்ட் என்று மட்டும் அர்த்தமல்ல. வலதுசாரி சிந்தனைக்கு எதிராக, முற்போக்குக்கான சிந்தனை அனைத்தும் இடதுசாரி சிந்தனை என்றார்.
தொடர்ந்து, இப்படம் குறித்து, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம். தாங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றது போன்று கட்டாயமாக போராட்டத்திலும் பங்கேற்போம்” என்று உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி.. நடந்தது என்ன?