சென்னை: தமிழில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த வாரம் வெளியான வேட்டையன், பிளாக் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் திரையரங்குகளில் எதிர்மறையான விமர்சனங்களை பெறும் படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள தமிழ்ப் படங்களை பற்றிப் பார்க்கலாம்.
கடைசி உலகப் போர்
ஹிப்ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ள திரைப்படம் "கடைசி உலகப்போர்". மாறுபட்ட களத்தில், போரின் கொடுமைகளை பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியிருந்த இப்படம் கடந்த செப் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, அழகம்பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் இந்தியிலும் வெளியானது. இந்நிலையில் கடைசி உலகப் போர் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் (அக்.18) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
கோழிப்பண்ணை செல்லதுரை
சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லதுரை. அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை இன்று சிம்ப்ளி சௌத் (Simply South) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் (Snakes & Ladders)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன் பேனரின் கீழ் கல்யாண் சுப்ரமணியன் தயாரித்துள்ள இணைய தொடர் ஸ்நேக்ஸ் & லேடர்ஸ். கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் உருவாக்கத்தில், அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோர் இந்த தொடரை இயக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: பிக்பாஸ் நாமினேஷன் ஃப்ரி பாஸ் வென்ற பெண்கள் அணி... மக்களிடம் பாராட்டை பெற்ற முத்துக்குமரன்!
இந்தத் தொடரில் நவீன் சந்திராவுடன் நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரிந்தா, ஸ்ரீஜித் ரவி, எம்.எஸ். சம்ரித், எஸ். சூர்யா ராகவேஷ்வர், எஸ். சூர்யகுமார், தருண் யுவராஜ் மற்றும் சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இன்று முதல் இந்த இணையத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் சீசன் 9 எபிசோட்கள் கொண்ட இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்