சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தனது சினிமா சந்தையில் தற்போது வரை கொடிகட்டி பறப்பவர். இருப்பினும், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், ஒரு சில படங்களை அடுத்து நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
இதனால், தனது அன்றாட ஊடக நடவடிக்கைகளை விஜய் மாற்றி வருவது, அவரது கல்வி விருது வழங்கும் நிகழ்வில் இருந்தே தெரிய வந்தது. இந்த நிலையில், தற்போது அரசிடம் போராடி, பல சட்ட போராட்டங்களைக் கடந்து பிரியமான ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியது முதல் வரி விவகாரம் வரை: கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost) என்ற காரை விஜய் வாங்கியிருந்தார். பின்னர், காரின் வாகன பதிவுக்காக கொண்டு சென்றபோது, காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.
ஏனெனில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டால்தான் வாகனத்தை பதிவு செய்ய முடியும். ஆனால், காரின் விலையை விட இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் பல வரிகளால் தொகை அதிகமாக இருந்தது. இதனால், நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் புகழ் பெற்ற நடிகர் என்பதால் "ரீல் ஹீரோக்களாக மட்டும் இருக்காதீர்கள், ரியல் ஹீரோக்களாகவும் இருங்கள். வரி என்பது நன்கொடையல்ல, அது ஒரு கட்டாயப் பங்களிப்பு. மேலும், வரிவிலக்கு தடை கேட்டதற்காக விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் கட்டச் சொல்லி” உத்தரவிட்டார். இந்த வழக்கு 2021ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதையும் படிங்க: வரி கட்டிய விஜய் - அரசு விளக்கம்
விற்பனைக்கு ரோல்ஸ் ராய்ஸ்: இந்நிலையில், அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இப்போது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 1 வகையைச் சேர்ந்த அந்த காரின் விலை 3.5 கோடி ரூபாயாகும். இந்த கார், லிட்டருக்கு 5 - 8 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் 250 கிலோமீட்டர் ஆகும்.
மினிகூப்பர், இனோவா, பிஎம்டபிள்யூ என விஜய் பல கார்களை வைத்திருந்தாலும், இந்த கார் மீது அவருக்கு தனிப்பிரியம் உண்டு. விஜயின் இந்த கார், Empire Autos எனும் ப்ரீமியம் கார் டீலர்ஷிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்காக காரின் புகைப்படங்களை அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும், இந்த காரின் விலை ரூ. 2.6 கோடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம்; நடிகர் விஜய் மீதான கருத்துகள் நீக்கம்!