சென்னை: தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் டப்பிங் பட எழுத்தாளராக விளங்கியவர் ஸ்ரீராமகிருஷ்ணா. தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜீன்ஸ், ஜெண்டில்மென், பம்பாய், சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களுக்குத் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் போது அப்படங்களுக்குத் தெலுங்கில் வசனம் எழுதியவர் ஸ்ரீராமகிருஷ்ணா.
கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களுக்குத் தெலுங்கில் வசனம் எழுதிய பெருமை இவரையே சேரும். தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் போது தமிழில் உள்ள வசனங்கள் மற்றும் அக்கதையின் ஜீவன் கெடாமல் தெலுங்கு வசனங்கள் எழுதுவதில் வித்தகராக விளங்கினார். மேலும் ஸ்ரீராமகிருஷ்ணா இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
இதன் மூலம் இவரது புகழ் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டிப் பிறந்தது. ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்களைத் தெலுங்கில் தனது சிறப்பான எழுத்தால் வெற்றிபெற வைத்தவர். சென்னையில் வசித்து வந்த ஸ்ரீராமகிருஷ்ணா நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
கடைசியாக ரஜினி நடித்த தர்பார் படத்திற்குத் தெலுங்கு வசனங்கள் எழுதியுள்ளார். இவரது மறைவு தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறைய இளம் எழுத்தாளர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக விளங்கிய ஸ்ரீராமகிருஷ்ணா உயிரிழந்தது தெலுங்கு சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கங்குவா பர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ்? - தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம்! - Kanguva First Single Release Date