சென்னை: லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'இந்தியன் 2' (Indian 2) திரைப்படம் நாளை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 1996-ல் வெளியாகி மெகா ஹிட்டான 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்த சேனாபதி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 2019-ல் தொடங்கிய இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, நாளை திரைக்கு வருகிறது. மேலும், இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு நாளை ஒரு நாள் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. மேலும் வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் காட்சி நள்ளிரவு 2 மணிக்குள் முடிவடைய வேண்டும் என தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
வழக்கமாக, வார நாட்களில் நான்கு காட்சிகளுக்கு மட்டும் படங்களை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து வந்த நிலையில், லைகா தயாரிப்பு நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியது. இந்நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் வழக்கமான 4 காட்சிகளோடு, சிறப்பு காட்சியுடன் சேர்த்து ஐந்து காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
முன்னதாக, மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், 'தன்னிடம் அனுமதி பெறாமல் இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியன் 2 படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்தவகையிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் நீதிபதி, நடிகர் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தரப்பு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குணா ரீ-ரிலீஸ்க்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! - GUNA RE RELEASE