சென்னை: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் உட்பட சில முக்கிய முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
இதற்கு உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி நடிகர் சங்கம் தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் தெரிவித்த கண்டனம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது, “ஏற்கனவே நாங்கள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறோம். மேலும், இன்று கூடியுள்ள செயற்குழு கூட்டத்திலும் அதைப் பற்றி விவாதித்தோம். இதை நிறைவேற்றுவதில் தீர்க்கமாக உள்ளோம்.
தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்துவதும், நிறுத்துவதும் நடிகர்களின் கையில் தான் உள்ளது. நாங்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்கச் சொல்லவில்லை. இந்தி, தெலுங்கு உட்பட மற்ற சினிமா துறையில் உள்ளது போல வியாபாரத்தில் ஷேரிங் முறைக்கு மாற வேண்டும் என தான் கோரிக்கை வைக்கிறோம். சினிமா துறையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் தான் நஷ்டத்தைச் சந்திக்கிறோம்.
தீர்மானத்தில் நாங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்த தேதிக்கு முன் நடிகர் சங்கத்துடனான பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டினால் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறும். தனுஷ் தொடர்பாக எவ்வித புகாரும் தெரிவிக்கப்படவில்லை என நடிகர் சங்கம் புகார் அளித்திருந்த நிலையில், நடிகர் சங்கத்திடம் ஏற்கனவே தனுஷ் மீதான புகாரை தெரியப்படுத்தியுள்ளோம். தேவைப்படும் பட்சத்தில் எழுத்துப்பூர்வமான புகார் மனுவை வெளியிடுவோம் என கூறியுள்ளனர்.
ஐந்து நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவெடுத்து விட்டோம். ஆனால், அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தோம். தற்போது அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லாத காரணத்தால், வேறு வழியில்லாமல் ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
விஷால் மீது தவறான நிர்வாகம் நடத்தியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினர். அது நிர்வாகமாக எடுத்த முடிவு, தனிப்பட்ட முறையில் என் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? சங்க நிதியை நலிந்த உறுப்பினர்களின் வாரிசு கல்விக் கட்டணம், ஓய்வூதியம், காப்பீடுக்குதான் செலவிடப்பட்டது என்று விஷால் எழுப்பிய கேள்விக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சரிவர பதில் அளிக்கவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்கு தயார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ரெட் கார்ட் என்பது இல்லை.. தனுஷ் பிரச்னை குறித்து முன்னாள் நிர்வாகி பேட்டி!