விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று 10 மணி முதல் தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து களத்தில் இறங்கியுள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம் போட்டியிடப் போவதாகவும் அதற்காக டெபாசிட் தொகை கட்டுவதற்கு விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகள் ஓரமாக கிடக்கும் காலி பாட்டில்களை சேகரித்து அதில் வரும் தொகையை வைத்து டெபாசிட் கட்டபோவதாகவும் அறிவித்துள்ளது.
அதோடு, இத்தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு முழுவதும் மது குடித்து உயிரிழந்த குடும்பத்தில் உள்ள கைம்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வழங்குவதற்கு சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம் எனவும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசே கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலிறுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுமானம் தயாரிக்க உதவும் கரும்பை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை இல்லாமல் முழுத்தொகையை வழங்க வழிவகை செய்வதோடு கடல்நீரில் இருந்து மதுபானம் தயாரிக்க திட்டம் வகுக்கப்படும் என எம்.எஸ்.ஆறுமுகம் தெரிவித்தார்.
விக்கிரவாண்டியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்கப்படும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் சரியான விலையில் பாட்டில்கள் விற்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்ததோடு, தலைவிரி கோலத்துடன் கையில் தாலி கயிறுகளுடன் வாக்கு சேகரித்தனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கே ஆதரவு: இந்திய குடியரசு கட்சி திட்டவட்டம்!