சென்னை: சுந்தர் சி தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களை எடுப்பதில் முக்கியமான இயக்குநராக அறியப்படுபவர். இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கிரி, வின்னர் போன்ற படங்கள் முதல் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தீயா வேலை செய்யனும் குமாரு, கலகலப்பு என ஏராளமான நகைச்சுவைப் படங்களை இயக்கியுள்ளார். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு என தனது ஒவ்வொரு படத்திலும் அந்தந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர்களை நடிக்க வைத்து வருகிறார் சுந்தர் சி.
தமிழ் சினிமாவில் பேய் படங்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், இவர் இயக்கிய அரண்மனை முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அரண்மனை இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கினார். இதில் அரண்மனை 3 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், தற்போது இயக்குநர் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். அரண்மனை 4 வழக்கம் போல அரண்மனைக்குள் இருக்கும் பேய், அங்குள்ளவர்களை பயம்காட்டும் படமாகத் தெரிகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அரண்மனை 4, தற்போது அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மொழிப் படங்கள் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டு மொழி கடந்தும் வெற்றி பெற்று வருகின்றன. ஆனால், தமிழில் இந்த ஆண்டு இதுவரையிலும் ஒரு படம் கூட குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. இந்த அரண்மனை படமாவது ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளை நோக்கி வரவழைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்..! 'ஜரகண்டி ஜரகண்டி'.. கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியீடு - Jaragandi Released Song