சென்னை: தமிழ் சினிமாத்துறையில் கடந்த 20 வருடங்களாக ஒரு சில தமிழ் மொழி பேசும் நடிகைகளை தவிர அதிகம் மலையாள தேசத்து நடிகைகளே அதிகம் வெற்றிநடை போடுகின்றனர் என கூறப்படுகிறது. அவ்வளவு ஏன், 80களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த அம்பிகா, ராதா காலம் முதல் மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மவுசு அதிகம். அதில் மீனா, த்ரிஷா, சிம்ரன், சினேகா, சமந்தா என ஒரு சில நடிகைகள் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
நயன்தாரா, அசின், அமலா பால், கீர்த்தி சுரேஷ் தொடங்கி சாய் பல்லவி, நிகிலா விமல், அன்னா பென் வரை பலர் அக்கட கேரளா தேசத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். பொதுவாக கலை, நடிப்பிற்கு மொழியை ஒரு தடையாக பார்க்கக் கூடாது என கூறுவது உண்டு. ஆனால் சமூக வலைதளங்களில் இது ஒரு பேசுபொருளாக கடந்த சில நாட்களாக உருவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பஞ்சமா, இங்குள்ள நடிகைகளுக்கு திறமை இல்லையா என பலர் கேள்வி எழுப்பி மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் நடித்த பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பாராட்டை பெற்று வருகின்றனர். அதே சமயம் வெளியான மின்மினி, ராயன் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி, கடந்த வாரம் வெளியான கொட்டுக்காளி படத்தில் நடித்த அன்னா பென், வாழை படத்தில் நடித்த நிகிலா விமல் ஆகியோரும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் போதிய தமிழ் மொழி பேசும் நடிகைகள் இல்லை என வசை பாடி வருகின்றனர். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் ஸ்ரீதேவி தொடங்கி இன்று ஐஷ்வர்யா ராஜேஷ் வரை தமிழ்நாட்டை சேர்ந்த பல நடிகைகளும் பல மொழிகளில் வெற்றிநடை போட்டு வருகின்றனர்.
பொதுவாக ஒரு சில நடிகைகளுக்கு தவிர மற்ற நடிகைகள், நடிகர்களை போல் நீண்ட காலம் சினிமாத்துறையில் மார்க்கெட்டில் நிலைத்திருப்பது அரிதாக பார்க்கப்படுகிறது. புதுமுக நடிகைகள் அதிகம் வரும் போது தொழில் போட்டி, திருமணம் என பல காரணங்களால் பழைய நடிகைகளுக்கு மவுசு குறைவதாக சினிமா வட்டாரத்தில் இருக்கும் பொதுவான கருத்தாகும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "இந்த பிரச்சனை மலையாள திரைத்துறையில் மட்டும் நடக்கவில்லை"..மனம் திறந்த நடிகர் டொவினோ தாமஸ்! - Actor tovino thomas