சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் உட்பட சில முக்கிய முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதுப் படங்களின் படப்பிடிப்பு நடக்காது என்றும், தீர்மானத்தில் தெரிவித்திருந்தது. இது தென்னிந்திய நடிகர் சங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து நாசர் தலைமையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இருதரப்பு இடையிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்டிரைக் வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (06.09.2024) துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் ஹேமச்சந்திரன், பிரேம், தாசரதி ஆகியோர் அடங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகக்குழு மற்றும் முரளி ராமசாமி தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாக குழுவின் இடையே சந்திப்பு நிகழ்ந்தது.
கடந்த 18.08.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
அதன் மீது தீவிர கலந்தாலோசனைக்கு பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, இரு தரப்பிற்கும் சாதகமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளும், நடிகர் தனுஷ் சம்பந்தப்பட்ட சுமூகமான பரஸ்பர தீர்வு அடங்கிய ஆவணங்களும் நேற்றைய சந்திப்பில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான முரளி ராமசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
செப்டம்பர் மாத இறுதிக்குள் பரிந்துரைகளை அளிக்க ஒப்புக்கொண்ட நிலையில், தமிழ்த் திரைத்துறை சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களின் பொது நலனை கருத்தில் கொண்டு, இது தொடர்பாக 15 தினங்களிலேயே தென்னிந்திய நடிகர் சங்கம் தங்கள் தரப்பு பரிந்துரைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இடையே ஒரு தீர்மானம் எட்டப்பட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கி, அதில் கணிசமான முன்னேற்றமும் உள்ளதால், புதிய படங்களுக்கு தற்போது பூஜையிட்டு துவக்கக் கூடாது என்றும், நவம்பர் 1ஆம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்து, திரைத்துறை தொழிலாளிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பணிகள் சுமூகமாக நடைபெற, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழிவகுக்கும் எனவும் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தாடியால் ட்ரெண்டை மாற்றிய நடிகர்கள்..! நீண்ட பட்டியலில் யார் முதலிடம்! - World beard day