சென்னை: காந்தாரா 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளை படக்குழு தொடங்கி உள்ள நிலையில், காந்தாரா 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பின் பணிகளையும், காந்தாரா 2 உடன் சேர்த்து ஒரே கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட சினிமாவில் ஹோம்பலே ஃப்லிம்ஸ் (Hombale Films) தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி, நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம், காந்தாரா, பஞ்சூர்லி தெய்வத்தின் பின்னணி கொண்ட கதையாக உருவாக்கப்பட்டது.
ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட காந்தாரா திரைப்படம், உலக அளவில் ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. கேஜிஎஃப் படத்திற்கு பிறகு காந்தாரா திரைப்படம் கன்னட சினிமாவிற்கு மிகப்பெரியை வெற்றியை பெற்றுத் தந்தது என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, காந்தாரா திரைப்படம் வெளியாகி 100வது நாளில் காந்தாரா 2ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதாவது, Kantara A Legend: Chapter 1 என்ற தலைப்பில் காந்தாரா படத்தின் முன்கதையாக (prequel) உருவாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. பின், காந்தாரா 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாக உள்ளது.
காந்தாரா 2ஆம் பாகத்திற்கு ரூ.200 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2ஆம் பாகத்திற்கான முதல் தோற்ற வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என 7 மொழிகளில் தயாராக உள்ளதாகவும் அறிவித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மங்களூரில் காந்தாரா 2ஆம் பாகத்திற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காந்தாரா 2ஆம் பாகத்தில் 1970, 80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் படப்பிடிப்புகள் மே மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நடித்துள்ள அரிசி படப்பிடிப்பு நிறைவு!