சென்னை: தமிழ் சினிமாவில் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்துள்ளன. குறிப்பாக, தொடக்கத்தில் காமராஜர், பெரியார், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டன. அதில், பெரியார் வாழ்க்கை வரலாறு படத்தில் பெரியாராக நடித்து வரவேற்பு பெற்றவர் நடிகர் சத்யராஜ். அப்படத்தில் அவரது பெரியார் கதாபாத்திரமும், தோற்றமும் அசலைப் போலவே இருந்ததாக பாராட்டப்பட்டது.
தொடர்ந்து, ஜெயலலிதாவின் பயோபிக் ‘தலைவி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. தற்போது இசை அமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாறு படமும் உருவாகிறது. தனுஷ் இதில் இளையராஜாவாக நடிக்கிறார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகிறது.
பாலிவுட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக எடுக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியாக, நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சத்யராஜ், பிரதமர் மோடியாக நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சத்யராஜ் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்த நிலையில், சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில், “The perfect person to play Ammavasai” என நக்கலாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆஹா..! 'கோட்' படத்தின் அந்த காட்சிகள்... புதிய அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர் வெங்கட் பிரபு - Goat Movie Update