சென்னை: தமிழ் சினிமாவில் அரசியல் நக்கல் படம் என்றால், அது அமைதிப்படை தான். மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் கலக்கிய இப்படம், இன்று வரையிலும் அரசியல் நையாண்டி படங்களுக்கு முன்னோடியாக பார்க்கப்படுகிறது.
அதிலும், சத்யராஜின் அமாவாசை கதாபாத்திரம் நிஜ அரசியல்வாதிகளை கிண்டல் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. நிஜ அரசியலில் அந்தர் பல்டி அடித்து மேலே வரும் நபர்களுக்கு அமாவாசை என்றே பெயர் வைத்து அழைத்தனர். அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது அப்படம்.
மணிவண்ணன், தமிழ் சினிமாவில் அனைத்து விதமான படங்களையும் இயக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர். அந்த வகையில், அப்போதைய அரசியலை கிண்டல் செய்து எடுத்த படம் தான் அமைதிப்படை. இப்படம் குறித்து ஒருமுறை பேசிய நடிகர் சத்யராஜ், “முதலில் இப்படத்தில் நடிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த கதையை மணிவண்ணன் சொல்லும் போது, தலைவரே நீங்க தான் ஹீரோ நீங்கள் தான் வில்லன் என்றார்.
அதற்கு நான் இப்போதுதான் ஹீரோவாக நன்றாக வந்து கொண்டு இருக்கிறேன். மீண்டும் என்னை வில்லனாக மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டாம் என்று சொல்லி, சரி கதை சொல்லுங்கள் என்றேன். அவர் எத்தனை நல்ல கதை சொன்னாலும் வேண்டாம் என்று சொல்லி விடவேண்டும் என்று கதையை கேட்டேன்.
அவர் சொல்ல சொல்ல திரையரங்குகளில் ரசிகர்கள் கைதட்டும் காட்சிகள் மனதுக்குள் ஓடியது. ஓட்டு எண்ணும் காட்சியில் நான் கொஞ்சம் கொஞ்சமாக நாற்காலியில் அமரும் காட்சியைக் கேட்டதும் அவரிடம் சரணடைந்தேன். இப்படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டேன்” என்றார்.
படத்தில் அத்தனை காட்சிகளும் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அந்த ஓட்டு எண்ணும் காட்சி மிக அற்புதமாக அமைந்திருந்தது. அன்றைய காலத்தில் இப்படத்தில் யாரை எல்லாம் கலாய்த்திருந்தார்களோ, அவர்களே படத்தை பார்த்துவிட்டு வெகுவாக ரசித்தனர். இப்படி சத்யராஜ் திரைவாழ்வில் அமைதிப்படை ஒரு மைல்கல் எனலாம்.
இந்த நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில், மோடியாக சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம் “அமாவாசை வேடத்தில் நடிக்க, சத்யராஜ் தான் சரியான நபர்” என்று விமர்சிக்கும் பாணியில் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் தளத்திலும் அமாவாசை என்ற பெயர் பேசு பொருளாகியுள்ளது. மோடி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறாரா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது வரை வெளியாகாத நிலையில், அமாவாசை கதாப்பாத்திரம் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆஹா..! 'கோட்' படத்தின் அந்த காட்சிகள்... புதிய அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர் வெங்கட் பிரபு - Goat Movie Update