சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தமிழ் சினிமாவில் தனித்துவமான பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அட்டகத்தி முதல் வடசென்னை, சார்பட்டா பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல்வேறு படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், தெருக்குரல் அறிவு வரிகளில், தீ மற்றும் அறிவு இணைந்து பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' என்ற ஆல்பம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இயற்கை பாதுகாப்பு தொடர்பான இந்தப் பாடலை தற்போது வரை உலகம் முழுவதும் 40 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில், இன்றுடன் பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சந்தோஷ் நாராயணன், “எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் குறித்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இது நாள் வரையில் இந்தப் பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், நான் எனது சொந்த ஸ்டுடியோவைத் துவங்கவுள்ளேன். தனி இசைக் கலைஞர்களுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை.
இதில் கூடுதலாக எனது யூடியூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிலுக்கேச் செல்கிறது. இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன். தனி இசைக்கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு சென்னையில் கார் ரேஸ் நடப்பதே தெரியாது.. நிவேதா பெத்துராஜ் விளக்கம்!